சென்னை:
திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான தேர்தல் வழக்கை ரத்து செய்யக்கோரிய அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது, திமுக சார்பில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்ட அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து, வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், ‘அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த வேட்புமனுவில் பல குறைபாடுகள் இருந்தன. அவர் மீதான கிரிமினல் வழக்குகள் தொடர்பான குற்றச்சாட்டு விவரங்களை வேட்புமனுவில் குறிப்பிடவில்லை. வேட்புமனுவை தேர்தல் அதிகாரிகள் நிராகரித்து இருக்கவேண்டும். ஆனால், அதை அவர்கள் செய்யவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளக்கு புகார் மனுவை அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, திருச்செந்தூர் தொகுதியில் அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்கவேண்டும்’ என வலியுறுத்தி இருந்தார்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அனிதா ராதாகிருஷ்ணன் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, அப்போது அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க மறுத்ததுடன், அவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.