வயதானவர்களைக் காப்பாற்றிய உண்மையான உதவிக்கரங்கள்….
இம்மாதம் 8-ம் தேதி சென்னையிலுள்ள “உதவும் கரங்கள்” ஊழியர் ஒருவருக்கு ஃபார்வேர்ட் செய்யப்பட்ட வாட்ஸ்ஆப் மெசேஜை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர் அதன் நிர்வாகிகள். திருவேற்காடு பகுதியில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் எலும்பும் தோலுமாய் மிகவும் வயதான பாட்டி ஒருவர் பிளாஸ்டிக் கேன், பேப்பர் மற்றும் பாட்டில்களுக்கு நடுவே ஓர் குப்பையைப்போலத் தரையில் கிடந்துள்ளார். தொடர்ந்து அவரிடமிருந்து உதவி கேட்டு அவலக்குரலில் மெல்லிய முனகல். அருகேயே முற்றிலும் வெளுத்துப்போன தலையுடன் இன்னொரு வயோதிகப் பெண்மணியும் அவர்களின் கடின சூழல் பற்றி விவரித்தபடியே அமர்ந்திருக்கிறார். இவர்களின் அடிப்படைத் தேவைகள் உணவு மற்றும் மருந்து மட்டுமே.
இதைக்கண்ட உடனே செயல்பட்டு, அதில் குறிப்பிட்ட செல்வ கணபதி நகர் சென்று பார்த்த போது மேலும் அதிர்ச்சி இவர்களுக்கு. வயதான மூன்று பேர் குப்பைகளுக்கு நடுவே பசி பட்டினியோடு எவ்வித அடிப்படை வசதியுமின்றி மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர்.
வீடியோவில் இருந்தவர் கடந்த 40 ஆண்டுகளாக நோயால் பீடிக்கப்பட்டுப் படுத்த படுக்கையாக உள்ள 60 வயது இந்திரா பிரியதர்ஷினி. இவரது தந்தை 15 வருடங்களுக்கு முன் இறந்துவிட, 85 வயதான தாய் ராஜலட்சுமி தான் அப்பளம் விற்று இவரைக் கவனித்து வருகிறார். இவரின் தினசரி வருமானம் ரூ. 200/- மட்டுமே. இவர்களுக்கு உதவியாக உடனிருந்து கவனித்து வந்த இவர் சகோதரர் 75 வயது வெங்கட சுப்ரமணியன் தொழுநோயால் தாக்கப்பட இவரையும் சேர்த்துக் கவனிக்கும் பொறுப்பு ராஜலெட்சுமிக்கு.
அப்பளம் விற்றுக்கிடைக்கும் ரூ. 200/- ல் தான் மூவரும் தங்கள் தேவைகளைக் கவனித்துக்கொள்வதுடன் வீட்டு வாடகை ரூ. 2,500/-ஐயும் தந்தாக வேண்டும். இதனால் பல நாட்களைப் பட்டினியாகவே கிடந்துள்ளனர். இந்த ஊரடங்கு அமல்படுத்திய பின் அப்பளம் விற்கக்கூட வெளியே செல்ல முடியாமல் போக மூவரும் கொலைப்பட்டினி.
தற்போது உதவும் கரங்கள் மூலம் வேங்கட சுப்ரமணியன் ஆனந்தபுரத்திலுள்ள ஓர் இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.
“எங்களோட குழுவினர் வீடு முழுவதையும் கம்ப்ளீட்டா சுத்தம் பண்ணி, பாட்டிகள் இருவருக்கும் முடி வெட்டிவிட்டு, குளிப்பாட்டி, புதுத்துணிகள் உடுத்தி விட்டுள்ளோம். தண்ணி வசதி இல்லாததால் இவங்க குளிச்சி பல நாட்கள் ஆகியிருந்தது” என்கிறார் உதவும் கரங்கள் செவிலியர் கோமதி சரவணன்.
ராஜலட்சுமி, பிரியதர்சினி இருவருமே உதவும் கரங்கள் இல்லத்தில் சேர விருப்பம் தெரிவித்ததைத் தொடர்ந்து அவ்வாறே செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. “காலைல சாப்பாடு, மதியம், இரவு உணவுனு குடுத்து வறோம். இதோட புதுத்துணிகள், பெட்சீட், போர்வை, தலையணை, பெட்பேன் மற்றும் டயஃபர் எல்லாம் குடுத்திருக்கோம். இவங்களுக்கு தேவையான மருத்துவ வசதியும் குடுத்திட்டு வரோம்” என்கிறார் கோமதி.
இவர்களை இவ்வளவு கொடுமையில் தள்ளிய கொரோனாவை திட்டத் தோன்றுகிறது. ஆனால் இந்த கொரோனாவால் தான் இவர்கள் இப்போது பாதுகாப்பானவர்களின் பராமரிப்புக்குச் சென்றுள்ளனர் என்பதும் உண்மை தானே.
– லெட்சுமி பிரியா