சென்னை:
தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும். தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, கோவை, நீலகிரி, தேனி, திருவள்ளூர் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
நெல்லை, தூத்துக்குடியில் லேசான மழைக்கு வாய்ப்ப உள்ளது, சென்னையில் மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
நாளை புதுவை மற்றும் வட தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லார் பகுதியில் 3 சென்டிமீட்டர் மழையும், நீலகிரி மாவட்டம் தேவலா, கோவை மாவட்டம், அவலாஞ்சி, வால்பாறை, சோலையாறு, சின்கோனா ஆகிய பகுதிகளில் தலா இரண்டு சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது
ஜூன்17 முதல் 19ம் தேதி வரை மத்திய வங்கக் கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் செல்ல வேண்டாம் , ஜூன்15 முதல் 19-ம் தேதி வரை, மத்திய அரபிக் கடல், தென்மேற்கு, மத்தியமேற்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறைக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் செல்ல வேண்டாம்.
குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை, ஒரு சில நேரங்களில் கடல் அலை 3.2 முதல் 3.6 மீட்டர் வரை எழக்கூடும். கேரள-கர்நாடக, லட்சத்தீவு கடல்பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசுவதால், மீனவர்கள் அங்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.