கொரோனா வைரஸ் பரவலால் உலக பொருளாதார சூழலில் ஏற்பட்டுள்ள விளைவுகளால், சில நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை இந்தியாவிற்கு இடம் பெயர்த்திட முடிவு எடுத்துள்ளன. அண்மையில் 15 ஆயிரத்து 128 கோடி ரூபாய் முதலீட்டிற்கான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்டன.
தற்போது, கேட் ஸ்பேட் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் லிஸ்ஃப்ரேஸர், பாசில் குழுமத்தின் தலைவர் கோஸ்டா கார்ட்கோடிஸ், நைக் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் ஜான் டான்ஹூ, அடிடாஸ் ஏஜி நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் காஸ்பர் ரோர்ஸ்டட், மேட்டல் இங்க் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் யோனன் கிரைஸ் ஆகிய 5 முன்னணி நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் தலைவர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்திட நேரிடையாக அழைப்பு விடுத்து முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ‘தமிழகத்தில் புதிய முதலீடுகளை மேற்கொள்வதில் உள்ள பல்வேறு சாதகமான அம்சங்களையும் சிறப்பான தொழில் சூழலையும் குறிப்பிட்டு, புதிய தொழில் முதலீடுகளுக்கு தமிழக அரசு சிறப்பான ஆதரவை நல்கும் என்றும் அவர்களின் தேவைகளுக்கேற்ப ஊக்க சலுகைகள் வழங்கிடும்’ என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.