லண்டன்: இந்த இக்கட்டான நேரத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து வந்துள்ளதானது ஒரு துணிச்சலான முடிவு என்று பாராட்டியுள்ளார் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன்.
3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக, கொரோனா வைரஸால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இங்கிலாந்து நாட்டிற்கு சென்றுள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணி. இதன்மூலம், 3 மாதங்கள் இடைவெளிக்குப் பிறகு ஒரு சர்வதேச டெஸ்ட் தொடர் துவங்கவுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், “இந்த இக்கட்டான சூழலில் விண்டீஸ் அணி, இங்கிலாந்து வந்துள்ளதற்கு, எனது பார்வையில் நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்.
தற்போது உலகில் என்ன நடந்துகொண்டுள்ளது என்பதை வைத்துப் பார்க்கும்போது, அவர்களின் முடிவு மிகவும் துணிச்சலானது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு டெஸ்ட் போட்டி துவங்குவது வரவேற்கத்தக்கது.
ஊரடங்கின்போது, வீட்டில் பயிற்சி மேற்கொள்ள ஓரளவு வசதி இருந்தது. அதேசயம், நீண்டநாள் ஓய்வு மற்றும் பயிற்சி போட்டிகள் இல்லாததால், டெஸ்ட் போட்டி மிகவும் சவாலானதாக இருக்கும். இதன்மூலம் வீரர்களுக்கு ஏற்படும் சுமையைக் குறைக்க, அவர்களை சுழற்சி முறையில் பங்கேற்க அனுமதிக்கலாம்” என்றார்.