
அகில இந்திய அளவில் மக்கள் மத்தியில் பிரபலம் வாய்ந்த அரசியல்வாதிகளில் பீகாரின் லாலுபிரசாத் யாதவ் முக்கியமானவர்.
லாலு என்றாலே, அவரின் வித்தியாசமான ஹேர் ஸ்டைல், குர்தா, கழுத்தில் தொங்கவிடப்பட்டிருக்கும் கண்ணாடி, வெற்றிலைப் போட்ட வாய், வெறும் உடம்போடு, சமயத்தில் பட்டாப்பட்டியுடன் போஸ் கொடுப்பது உள்ளிட்டவையே, அடையாளக் குறிகளாகவே நினைவுக்கு வருபவை!
தற்போது ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, மோடி அரசின் ரெட்லிஸ்ட்டில் இடம்பெற்று, இன்று சிறைக் கைதியாய் இருந்தாலும், பீகார் மாநிலத்தில் இவருக்கான செல்வாக்கு இன்னும் குறைந்துவிடவில்லைதான்! ஜுன் 11ம் தேதி இவர் தனது 73வது பிறந்தநாளை மருத்துவமனையில் எளிமையாகக் கொண்டாடியுள்ளார்!
பீகார் அரசியலில் இவரைப் பற்றி பொதுவெளியில் கட்டமைக்கப்பட்டிருந்த பல எதிர்மறையான எண்ணங்கள், மத்திய ரயில்வே அமைச்சராக கடந்த 2014-2019ம் ஆண்டு காலக்கட்டத்தில் இவரின் செயல்திறனால் பெரியளவில் ஆட்டம் கண்டன.
‘மாட்டுக்கார வேலன்’ என்று கார்ப்பரேட் மற்றும் மேல்ஜாதி ஊடகங்களால் இகழப்பட்ட இவரின் நிர்வாகத்தின்கீழ், இந்திய ரயில்வே, பயணிகள் கட்டணத்தை ஒருமுறைகூட, சிறிதளவுகூட உயர்த்தாமலேயே லாபகரமான துறையாக விளங்கியது.
ஆனால், இவருக்குப் பிறகு அத்துறைக்கு பொறுப்பேற்ற பல அறிவுஜீவி(!) அமைச்சர்களின் காலத்தில், ரயில் கட்டணங்கள் அடுத்தடுத்து உயர்த்தப்பட்டன பல்வேறான சப்பைக் காரணங்களால்!
ஆனால், ரயில்வே அமைச்சராக லாலுவின் செயல்திறன் ஒருபுறம் இருக்கட்டும்; பீகார் ஆட்சியதிகாரத்தில் அவரின் மீதான கடும் விமர்சனங்கள் மறுபுறம் இருக்கட்டும், ஊழல் புகார்கள் இன்னொருபுறம் இருக்கட்டும்…. ஆனால், தொடக்கம் முதலாக அவரின் அரசியல் செயல்பாடுகள் மற்றும் கொள்கைப் பிடிப்பில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட உறுதித்தன்மைதான் அவரின் சிறப்பு! அதுவே, அவரின் உருவம் சார்ந்த மற்ற டிரேட் மார்க் அடையாளங்களை மீறி, லாலுவின் அரசியல் டிரேட் மார்க் அடையாளமாக இருக்கிறது!
அவர் தனது 73வது ஆண்டில் நுழைந்துள்ள இத்தருணத்தில், அதைப்பற்றி அலசுவதே இக்கட்டுரை.

* இந்திரா காந்தியை எதிர்த்து, கடந்த 1970களில் வடமாநிலங்களில் நிலைகொண்ட ஜனதா அலையில் அடித்துவரப்பட்ட தலைவர்களுள் ஒருவர்தான் லாலுபிரசாத். ஜனநாயக சோஷலிஸ்ட் என்று அறியப்பட்ட ராம் மனோகர் லோகியாவின் சித்தாந்தத்தை உள்வாங்கிய மாணாக்கர்களுள் இவரும் ஒருவராக அறியப்படுபவர்.
* கடந்த 1967ம் ஆண்டிலேயே இறந்துவிட்ட ராம் மனோகர் லோகியாவின் சோசலிஷ சித்தாந்தங்கள் (முதலாளித்துவம் & பொதுவுடைமை இரண்டையுமே ஏற்றுக்கொள்ளாமை), 1970களில் உச்சம்பெற்ற ஜெயப்பிரகாஷ் நாராயணனின் அரசியல் இயக்கத்தில் பெரிய தாக்கம் செலுத்தின.
* மிகவும் சாதாரண ஒரு குடும்பத்தில் பிறந்த லாலு பிரசாத், பாட்னா பல்கலையில் படித்துக்கொண்டிருந்தபோது, 1973ம் ஆண்டில், அப்பல்கலையின் மாணவர் பேரவை தலைவராக தேர்வாகிறார். அதுதான் அவருடைய அரசியல் வாழ்விற்கான முதல் அடிப்படை.
* பின்னர், 1974ம் ஆண்டு ஜெயப்பிரகாஷ் நாராயணனின் பீகார் இயக்கத்தில் இணையும் இவர், ஜனதாக் கூட்டணியில், 1977 மக்களவைத் தேர்தலில், பீகாரின் சாப்ரா தொகுதியில் போட்டியிட்டு, தனது 29 வயதிலேயே மக்களவை உறுப்பினராகிறார். அப்போதைய மிக இளம் வயது மக்களவை உறுப்பினர் இவர்தான்!
* 1980ம் ஆண்டு பீகார் சட்டசபைக்கு தேர்வாகிறார். பீகார் சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவராகவும் ஆகிறார்.
* 1990ம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டசபைத் தேர்தலில், ஒருங்கிணைந்த ஜனதாதளம் பெரும்பான்மை பெற, யார் முதல்வர் என்ற கோதா நடக்கிறது. அப்போதை பிரதமர் வி.பி.சிங்கின் தேர்வாக இருந்தவர் முன்னாள் பீகார் முதல்வர் ராம்சுந்தர் தாஸ். ஆனால், ஜனதாதளத்தின் மற்றொரு பிரமுகர் சந்திரசேகரின் ஆதரவு ரகுநாத் ஜாவுக்கு இருந்தது.
* இந்த கோதாவில் இடையில் புகுந்த துணைப்பிரதமர் தேவிலால், லாலுபிரசாத்தை பீகார் முதல்வராக நியமிக்கிறார். சட்டமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மையோரின் ஆதரவைப் பெற்று, தனக்கு கிடைத்த வாய்ப்பை வலுவாக்கிக் கொள்கிறார் லாலு.
* மிக இளம்வயது மக்களவை உறுப்பினர், பீகார் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் 42 வயதில் பீகார் முதல்வர் என்று, அரசியலில் ஜிவ்வென உயர்ந்த நிலையில், தொடக்கம் முதல் இப்போதுவரை, ஒரு விஷயத்தில் மிகவும் உறுதியாக இருக்கிறார் லாலு பிரசாத் யாதவ். அது இந்துத்துவத்தின் அரசியல் வடிவமான பாரதீய ஜனதா எதிர்ப்பு!
* குஜராத்தில் புறப்பட்ட எல்.கே.அத்வானியின் ரத யாத்திரை, மத்தியப் பிரதேசத்தைத் தாண்டி, பீகாரின் சமஸ்திபூர் என்ற இடத்தில் நுழைந்தவுடன், அத்வானியை கைதுசெய்கிறார் அப்போதைய பீகார் முதல்வர் லாலு பிரசாத். இதனால், வி.பி.சிங்கின் மத்திய அரசு கவிழ்ந்தது வேறு கதை!
* பீகாரில், அவருடைய ஆட்சிக் காலத்தில் நிலச்சுவான்தார்களின் அடக்குமறை பயங்கரங்கள் இருந்திருக்கின்றன. பல படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. ஆனால், இந்துத்துவ வன்முறைகள் என்று எதையும் அவர் தன் மாநிலத்தில் அனுமதித்ததில்லை. சமாஜ்வாடி கட்சியின் ஆட்சியில், உத்திரப்பிரதேசத்தில் நடைபெற்ற மதவாத வன்முறைகளைப் போல், லாலுவின் யுகத்தில் பீகாரில் எப்போதும் நிகழ்ந்ததில்லை. ஆனால், முலாயம்சிங்கும்கூட, ராம் மனோகர் லோகியாவின் சித்தாங்களை உள்வாங்கிய மாணவராக அறியப்பட்டவர்தான்!

* தத்துவார்த்த ரீதியாக இந்துத்துவ எதிர்ப்பைக் கொண்ட ஆனானப்பட்ட திமுகவே, கடந்த 1999 மக்களவைத் தேர்தலிலும், 2001 தமிழக சட்டமன்ற தேர்தலிலும் பாரதீய ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்து பலருக்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது (தான் தொடர்ந்து மத்திய அமைச்சராக இருக்க வேண்டும் என்பதற்காக, முரசொலி மாறன் வற்புறுத்தியதால்தான் அந்த முடிவு என்ற விமர்சனங்களும் உண்டு).
* உத்திரப்பிரதேசத்தில் முலாயம்சிங் மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய தலித் பெண் தலைவர் என்று அறியப்படும் மாயாவதி போன்றோரெல்லாம் பாரதீய ஜனதாவுடன் நீக்குபோக்காக நடந்துகொண்டவர்கள்தான்! மாயாவதி, பாரதீய ஜனதாவுடன் இணைந்து கூட்டணி ஆட்சியே நடத்தியிருக்கிறார்!
* மதசார்பற்ற ஜனதாதளம் என்று தன் கட்சிக்குப் பெயரை வைத்துக்கொண்டிருக்கும் தேவகெளடா, தன் மகனை, பாரதீய ஜனதாவின் ஆதரவுடன் கர்நாடக முதல்வராக்கியவர்தான்!
* தமிழகத்தை சமூக நீதியின் தலைநகரம் என்று புகழும் ராம்விலாஸ் பஸ்வான் போன்ற தலித் தலைவர்கள், அந்த சமூக நீதிக்கு முற்றிலும் நேரெதிரான பாரதீய ஜனதாவுடன் பல்லாண்டுகளாக கூட்டணியில் இணைந்திருந்து பதவி சுகத்தை அனுபவிக்கிறார்கள்!
* இன்று, பாரதீய ஜனதாவை பெரியளவில் எதிர்த்து, முஸ்லீம்களுக்கு ஆதரவானவராக காட்டிக்கொள்ளும் மம்தா பானர்ஜி, முன்பு, அக்கட்சியுடன் கூட்டணி கண்டு, அமைச்சர் பதவி வகித்தவர்தான்.
* காங்கிரஸில் பலகாலம் இருந்த சில தலைவர்கள்கூட, அதிலிருந்து விலகி பாரதீய ஜனதாவில் சேர்ந்ததுண்டு; சிலர் தனிக்கட்சி கண்டு பாரதீய ஜனதாவுடன் அரசியல் கூட்டு வைத்துக்கொண்டதுமுண்டு.
* பாரதீய ஜனதாவைப் போன்றே, ஒரு மோசமான இந்துத்துவப் போக்கைக் கொண்ட சிவசேனா கட்சியுடன் இணைந்து, மராட்டியத்தில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணி ஆட்சியையும் நாம் பார்க்கிறோம்.
* முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பாரதீய ஜனதாவுடன் கூட்டணிகளைக் கண்டவர். இன்றைய ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும் பாரதீய ஜனதா விஷயத்தில் ‘சாஃப்ட் கார்னர்’ கொண்டவர்தான்.
* ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், பாரதீய ஜனதா கூட்டணியில் நீண்டகாலம் இருந்தவர்.

* இவ்வளவு ஏன், காஷ்மீரில் மெஹ்பூபா முஃப்தியின் கட்சிகூட, காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்துக்கு பரம விரோதியான பாரதீய ஜனதாவுடன் சேர்ந்து கூட்டணி அரசை நடத்திவிட்டது.
மேற்கண்ட உதாரணங்களைப் பார்க்கையில், பீகாரில் முஸ்லீம் வாக்குகளைத் தக்கவைப்பதற்காக, லாலுபிரசாத், தொடர்ந்து பாரதீய ஜனதாவை எதிர்த்து வருகிறார் என்று முன்வைக்கப்படும் மொக்கை வாதம் அடிபட்டுப் போகிறது. ஏனெனில், இதே நியாயம், நாம் மேலே சொன்ன அனைவருக்குமே இருக்கிறது!
ஆனால், அந்தந்த சூழல்களின் அரசியல் பலாபலன்களைக் கணக்கிட்டே பல பிராந்தியக் கட்சிகளின் தலைவர்களும் இதுவரை செயல்பட்டு வந்துள்ளார்கள்; லாலுவைத் தவிர!
பீகார் அரசியலில் தோல்விகளை சந்தித்து தனிமைப்படுத்தப்பட்டபோதும் சரி, வழக்குகள் மற்றும் சிறைவாசம் போன்ற சோதனைகளை சந்தித்தபோதும் சரி, பாரதீய ஜனதாவுடன் எவ்வித சமரசத்தையும் செய்துகொள்ள தயாரில்லாதவராகவே இருக்கிறார் லாலுபிரசாத்!
ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட காலத்தில், தனக்கு ஆதரவான ஒரு சட்டத்திருத்தத்தை அன்றைய மன்மோகன்சிங் அரசு கொண்டுவர முயன்றபோது, ராகுல் காந்தியின் கடுமையான எதிர்ப்பால் அது கிடப்பில் போடப்பட்டது. ஆனால், அந்த கோபத்தினால் அவர் பாரதீய ஜனதாவுடன் நட்புப் பாராட்ட முயலவில்லை. மாறாக, 2015 பீகார் சட்டசபை தேர்தலில், ராகுல் காந்தியின் காங்கிரஸை கூட்டணியில் சேர்த்து 40 இடங்களை வாரி வழங்க காரணமாக இருந்தார்.
நாட்டின் பிற தலைவர்களுக்கு மாறிய அரசியல் சூழல்கள், நினைத்திருந்தால் லாலுவுக்கும் மாறியிருக்கலாம்தான்..!
இப்போது, மாட்டுத்தீவன வழக்குகளில் அடுத்தடுத்த சிறை தண்டனைகளைப் பெற்று வாடி வருகிறார் லாலு. அவரின் கட்சியும்கூட பீகாரில் பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்ற முதிர்ச்சியோ, அனுபவமோ, பக்குவமோ அவருடைய வாரிசுகளிடத்தில் இல்லை.
ஆனாலும், பாரதீய ஜனதா விஷயத்தில், லாலுவிடம் சமரசத்திற்கு இடமில்லை! சிலகாலத்திற்கு முன்புகூட, “பாரதீய ஜனதாவுடன் சமரசம் செய்துகொள்வதைவிட, இறப்பதே மேல்” என்று காட்டமாக கூறியிருந்தார் லாலு பிரசாத்!

லாலுபிரசாத், சித்தாந்த் ரீதியாக இந்துத்துவா எதிர்ப்பாளர் கிடையாது; சாதி எதிர்ப்பாளர் கிடையாது. தன் பெயருக்குப் பின்னால் சாதியைக் கொண்டிருப்பவர்தான். ஆனாலும், பாரதீய ஜனதாவைத் தொடர்ந்து எதிர்க்கிறார்..!
அவருக்கு, நாமும் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம்!
– மதுரை மாயாண்டி
[youtube-feed feed=1]