சென்னை

மின் வாரியத்தில் பணியாற்றும் வேற்று மாநில பொறியாளர்கள் தமிழைக் கற்க வேண்டும் என மின்சார துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

தமிழக மின் வாரியத்தில் சமீபத்தில் மின்சாரம் மற்றும் கட்டுமான பிரிவுகளில் 325 துணை பொறியாளர்கள் நியமிக்கபட்டுளனர்.  இந்த பணிக்காக மொத்தம் 1.4 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.  பணி அளிக்கப்பட்டுள்ளவர்களில் 38 பேர் ஆந்திரப்பிரதேசம், கேரளா, மகாராஷ்டிரா,கர்நாடகா மற்றும் பீகார் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

இவ்வாறு வெளி மாநிலங்களை சேர்நோருக்கு பணி அளிப்பதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.   தற்போது தமிழகத்தைச் சேர்ந்த  லட்சக்கணக்கான பொறியாளர் பட்டதாரிகள் வேலை இன்றி திண்டாடும் போது இவ்வாறு வேற்று மாநிலத்தவருக்குப் பணி புரிய வாய்ப்பு அளித்ததற்கு திமுக தொழிற்சங்க தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, “உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தற்போது வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழக மின் வாரியத்தில் பணி புரிய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.  இவர்கள் தமிழகத்தில் பணி புரிய விரும்பி வந்துள்ளனர்.  இவர்கள் இன்னும் இரு வருடத்துக்குள் தமிழ் மொழியை கற்க வேண்டும்.  இல்லையெனில் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள்” என தெரிவித்துள்ளார்.