ர்மசாலா

மாசலப் பிரதேசத்துக்கு சுற்றுலாப் பயணிகள் வர அனுமதிக்கும் அரசு சுற்றிப் பார்க்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளதால் விடுதி உரிமையாளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

நாடெங்கும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் அனைத்து பயணங்களும் ரத்து செய்யப்பட்டன.   இதனால்  சுற்றுலாத்துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டது.  குறிப்பாக சுற்றுலாத்தலங்களில் உள்ள அனைத்து விடுதிகளும் ஆள் அரவமின்றி காலியாக இருந்தன.   எனவே சுற்றுலா பயணிகளுக்கான தடை விலக்கலுக்கு விடுதி உரிமையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர்

தற்போது ஊரடங்கு விதிகள் தளர்வு செய்யப்பட்டுள்ளதால் இமாசலப் பிரதேச அரசு சுற்றுலாப் பயணிகளுக்கான பயணத் தடையை நீக்கி உள்ளது  அத்துடன் இது குறித்து விடுதிகளுக்கும் பயணிகளுக்கும் கடும் கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது.   அதன்படி சுற்றுலாப் பயணிகள் நல்ல உடல் நலத்துடன் இருக்க வேண்டும்.  கொரோனா பாதிப்பு இல்லை என்னும் சான்றிதழ் மற்றும் பயண அனுமதி வைத்திருக்கவேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இதை அடுத்து மேலும் கூறப்பட்ட விதிமுறைகளால் விடுதி உரிமையாளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.   விடுதிகளில் தங்கும் சுற்றுலாப் பயணிகளை விடுதிகளை விட்டு வெளியே  சென்று சுற்றிப் பார்க்க  அனுமதிக்கக் கூடாது.  மேலும் அவர்கள் உள்ளூர் சுற்றுலா, கடைகளுக்குச் செல்லுதல் கூடாது எனவும் மொத்தத்தில் விடுதியை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கக் கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுற்றுலா பயணிகள் வெளியே செல்ல நேர்ந்தால் அது விதி மீறலாகக் கணக்கிடப்பட்டு பயணிகள் மீதும் விடுதி உரிமையாளர் மீதும் சட்டப்படி வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.   அதே வேளையில் விடுதிக்குள் மட்டும் சுற்றுலாப் பயணிகள் ஆங்காங்கே செல்வதை விடுதி உரிமையாளர்கள் தடை செய்யக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது.

இதனால் விடுதி உரிமையாளர்கள் பயணிகளின் முழுப் பொறுப்பையும் அரசு ஏற்க விரும்பாமல் விடுதியாளரக்ளிடம் தள்ளி விடுவதாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.   மேலும் சுற்றுலாப் பயணிகளைச் சுற்றிப் பார்க்க அனுமதிக்காவிட்டால் அவர்கள் இங்கு வரமாட்டார்கள் என்பதால் தங்கள் விடுதிகளைத் திறக்கப்போவதில்லை என அறிவித்துள்ளனர்.

இது குறித்து முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் விஜய் சிங் மன்கோட்டியா,  ”இது போல ஒரு உத்தரவு பிறப்பிக்க எப்படி அரசு முடிவு செய்தது? இமாசலப் பிரதேச அரசின் இந்த உத்தரவு நகைப்பை ஏற்படுத்துகிறது.  இதன் மூலம் சுற்றுலாத் துறையைக் கொலை செய்ய இந்த அரசு முடிவெடுத்துள்ளது நன்கு தெரிகின்றது.” எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.