டெல்லி:
மத்திய சுகாதார அமைச்சக பணியாளர்க;s 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், 2 நாட்களுக்கு அலுவலகத்தை முழுவதுமாக மூடி சுத்தப்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.
தலைநகரான டெல்லியில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது.,அங்கு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் அங்குள்ள நிர்மாண் பவன் கட்டித்தில் உள்ள மத்திய சுகாதார அமைச்சகத்தினுள்ளும் கொரோனா பரவி உள்ளது. அங்கு ஒரு இயக்குனர், ஒரு துணைச்செயலாளர், ஒரு டாக்டர், 2 ஊழியர்கள் என 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த கட்டிடம் மூடி, கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.
சுகாதார அமைச்சகத்தில் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும், கொரோனா அறிகுறிகள் இல்லாதவர்கள் மட்டுமே பணிக்கு வர வேண்டும், சந்திப்புகள், கூட்டங்கள் அனைத்தும் காணொலி காட்சி வழியாக மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் 5 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து, அவர்களுடன் தொடர்பில் இருந்த சக ஊழியர்கள் உள்பட அனைவரும், தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் 2 நாட்களுக்கு (இன்றும், நாளையும்) மூடப்படுகிறது. இந்த 2 நாட்களும் அங்கு தீவிரமாக சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அமைச்சக வளாகம் முழுவதும் உள்ள அனைத்து அறைகள், கழிவறைகள், கதவு கைப்பிடிகள், சுவிட்சுகள், நாற்காலிகள், மேஜைகள், சோபாக்கள், அலமாரிகள், கணினி உபகரணங்கள், அச்சு எந்திரங்கள் போன்ற அனைத்தும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.