சென்னை:
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் (வயது 62 ) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கொரோனா நிவாரணப்பணிகளை சுறுசுறுப்பாக செய்துவந்த திமுக சென்னை மேற்கு மாவட்ட செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற எம்.எல்.ஏ.வுமான ஜெ.அன்பழகன் உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 2ந்தேதி சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்திருந்தது. தொடக்கத்தில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை என்றும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனைத் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் அவரது உடல்நிலை முன்னேற்றம் இருப்பதாக கூறப்பட்டது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் மருத்துவமனை சென்று அவரது உடல்நலம் குறித்து விசாரித்தனர்.
இந்த நிலையில், 8/6/2020 அன்று இரவு வெளியிட்ட அறிக்கையில், அவரது உடல் நிலை மேலும் மோசமடைந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதில், அவருக்கு வழங்கப்படும் ஆக்ஸிஜன் தேவை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. அவரது இருதய செயல்பாடும் மோசமடைந்துள்ளது. ரத்த அழுத்தத்துக்காக மருத்துவ உதவிகள் தேவைப்படுகின்றன. மேலும், நாள்பட்ட சிறுநீரக நோயும் மோசமடைந்து வருகிறது. தற்போதைய நிலையில், அவர் கவலைக்கிடமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளது.