பெங்களூரு:
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் மகளுக்கும், மறைந்த காஃபி டே அதிபர் வி.ஜி.சித்தார்த்தின் மகனுக்கும் திருமண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த திருமணம் தொடர்பாக காஃபி டே அதிபர் சித்தார்த் தற்கொலை செய்வதற்கு முன்பாகவே பேசப்பட்டு இருந்தாகவும், ஆனால், கடந்த ஆண்டு சித்தார்த் தற்கொலை செய்துகொண்டதால், திருமண ஏற்பாடுகள் நிறுத்தப்பட்டதாகவும், தற்போது மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சித்தலைவராக இருந்து வருபவர் டி.கே.சிவகுமார். இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா (வயது 22) பொறியியல் பட்டதாரி யான ஐஸ்வர்யா தற்போது சிவகுமார் நிறுவிய குளோபல் அகாடமி ஆஃப் டெக்னாலஜியின் நிர்வாகத்தை கவனித்து வருகிறார்.
அதுபோல கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் பேரனும், மறைந்த காஃபி டே அதிபர் வி.ஜி.சித்தார்த்தின் மகனுமான அமர்த்தியா (வயது 27) ஹெக்டே தற்போது தனது தாயார் மாளவிகாவுடன் இணைந்து வணிகத்தை நடத்தி வருகிறார்.
இவர்களது திருமணம் சித்தார்த் மறைந்து ஒரு வருடத்திற்கு பிறகு நடத்த தீர்மானிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. வி.ஜி. சித்தார்த்தா கடந்த ஆண்டு ஜூலை 2019 இல் மங்களூருவில் உள்ள நேத்ராவதி ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக்கொண்டார். தற்போது 10 மாதங்கள் கடந்த நிலையில், இன்னும் 2 மாதத்தில் அவரது முதலாண்டு நினைவு நாள் வர உள்ளது. அதன்பிறகே திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
இதற்கிடையில், சமீபத்தில் அமர்த்தியா, சிவகுமாரின் மகள் ஐஸ்வர்யாவை சந்தித்து பேசியதாகவும், அதைத்தொடர்ந்து இரு குடும்பத்தினருக்கும் இடையே மீண்டும் திருமண பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. வரும் ஆகஸ்டு மாதத்தில் இரு குடும்பத்தினருக்கும் இடையே திருமண நிச்சயதார்த்தம் நடைபெறும் என்றும், இந்த ஆண்டு இறுதியில் திருமணம் நடைபெறும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.