நாகர்கோவில்:
அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடக மாநிலங்களில் பெட்டிகள் மூலம் தேனீ வளர்த்து, தேன் விவசாயம் செய்து வரும் குமரி மாவட்ட விவசாயிகள், அங்கு நிரம்பி வழியும் 3லட்சம் கிலோ தேனை தமிழகத்துக்கு எடுத்துவர அந்தந்த மாநில அரசுகளிடம் அனுமதி பெற்றுத்தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழகத்திலேயே தேன் விவசாயிகள் அதிகம் உள்ளது குமரி மாவட்டத்தில்தான். இங்கு தேன் கூடுகள் வைக்கப்பட்டு, தேனிக்களை வளர்த்து, தேன் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மாவட்ட விவசாயிகள், அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் உள்ள மலைப்பிரதேசங்கள், விவசாய இடங்களில் தேன்கூடுகள் வைத்து, தேன் உற்பத்தி செய்து தொழில் நடத்தி வருகின்றனர்.
ஆனால், கொரோனா ஊரடங்கால், அவர்கள் அண்டை மாநிலங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அங்கு தேன்கூடுகளில் வளர்க்கப்பட்ட வரும் தேனிக்கள் மூலம் தேன் உற்பத்தி செய்யப்பட்டு தேன் கூடுகள் நிரம்பி வழிவதாக கூறப்படுகிறது. இதனால், விவசாயிகள் கடும் மன அழுத்தத்துக்கு ஆளாகி உள்ளனர்.
சுத்தமான தேன் மருத்துவ குணம் வாய்ந்தது. டிபார்ட்மென்டல் ஸ்டோர்கள் முதல் பெட்டிக்கடை வரை தேன் கிடைத்தாலும், கலப்படம் இல்லாத தேன் என்றால் அதற்கு தனி கிராக்கி உண்டு. மலை, மரம், பாறை, கட்டிடம் என எட்டாத உயரத்தில் அடைகட்டும் தேனீக்களை, வீட்டிலேயே வளர்த்து தேன் சேகரித்து விற்கலாம். அதன் மூலம் நல்ல லாபம் பார்க்கலாம். மலை, கொம்பு, கொசு, இத்தாலி என பல வகைகள் இருந்தாலும், இந்திய தேனீ வகைதான் இந்த தொழிலுக்கு ஏற்றதாக, அதாவது பெட்டிகளில் வளர்க்க தகுந்தவையாக உள்ளன. இந்திய தேனீ வளர்ப்பு தொழிலில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமானோர் தேன் விவசாயம் செய்து வருகின்றனர்.
இவர்கள் குமரி மாவட்டம் இன்றி, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் தேன் உற்பத்தி செய்துவருகின்றனர். தற்போது கொரோனா ஊரடங்கால் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக தேன்பெட்டிகளை பராமரிக்க முடியாத நிலையில், அங்கு தேன் நிரம்பி வழிவதாகவும், அதை எடுத்து, பத்திரப்படுத்தி விற்பனை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாக வேதனை தெரிவித்து வருகின்றனர.
கொரோனா ஊரடங்கு காரணமாக அம்மாநிலங்களில் வைக்கப்பட்டுள்ள மரக் கூடுகளைப் பராமரிக்க முடியாமலும், உற்பத்தி செய்த தேனை ஊருக்குக் கொண்டுவர முடியாமலும் தவிக்கிறார்கள்.
இதுகுறித்து கூறிய, தொழிலாளர் அமைப்பான சிஐடியு கன்னியாகுமரி மாவட்ட தேன் சேகரிப்போர் சங்க செயலாளர் ஜூடஸ் குமார்,, குமரி மாவட்டத்தைச் சேர்ந்த தேன் விவசாயிகள் ஏராளமானோர் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் பெட்டிகளை வைத்து தேன் உற்பத்தி செய்து வருகின்றனர். தற்போது கொரோனா அங்குள்ள தேன்பெட்டிகளை பராமரிக்கவும், சேமிக்கப்பட்டுள்ள தேனை எடுக்க முடியாத நிலையில் உள்ளது. வாரத்திற்கு ஒரு முறை தேன் கூடுகளை பராமரிக்க வேண்டும், ஆனால் லாக்டவுன் காரணமாக தேன் விவசாயிகள் அங்கிருந்து, சொந்த ஊருக்கு வந்து 3 மாதங்கள் ஆன நிலையில், தேன்கூடுகளும் சிதலமடைந்து தேன் வீணாகி வருவதாக அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தேன் கூட்டுக்கள் எறும்புகள் புகுந்து விட்டால், தேனீக்கள் கூட்டைவிட்டு வெளியேறிவிடும், இதனால் தொடர்ந்து தேன் உற்பத்தி செய்ய முடியாத நிலை உருவாகி விடும்.. குமரி மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 15 ஆயிரம் பேர் கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் தேன் உற்பத்தி செய்துவருகிறார்கள்.
கொரோனா ஊரடங்கு காரணமாக தேன் விவசாயிகள் அங்கு சென்று தங்கி பராமரிக்கவும், தேன் சேகரிக்கவும் மாநில அரசுகள் அனுமதி வழங்க மறுத்து வருகின்றன. இதனால், அங்கு உற்பத்தி செய்யப்பட்டுள்ள சுமார் மூன்று லட்சம் கிலோ தேன் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதை கன்னியாகுமரி மாவட்டத்துக்கு எடுத்து வர தமிழக அரசு அனுமதி பெற்றுதர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.