ரூ. 80,000 கடனுக்காக ஜாகுவார் கார் திருட்டு
சென்னை அண்ணாநகரிலுள்ள ஓர் அபார்ட்மென்ட்டில் குடியிருக்கும் பாலகிருஷ்ணன் என்பவருக்குச் சொந்தமான ஜாகுவார் கார் மே 31-ம் தேதியன்று காணாமல் போய்விட்டது. அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கார் சாவியை அதன் டிரைவர் தொலைத்துவிட, மாற்றுச் சாவியைத் தேடி வந்திருக்கிறார் பாலகிருஷ்ணன். இந்நிலையில் காரும் காணாமல் போய்விட போலீசில் புகார் அளித்திருக்கிறார் இவர். போலீசார் டிரைவரிடம் நடத்திய விசாரணையில் அப்பார்ட்மெண்ட் காவலாளி விஜயராம் அடிக்கடி காரை துடைக்க உதவுவது தெரியவர, உடனடியாக சிசிடிவி பதிவுகளைப் பார்த்தபோது விஜயராம் காரை ஓட்டிச்செல்வது தெரிந்துள்ளது.
உடனடியாக அவரை அழைத்து விசாரித்தபோது குற்றத்தை ஒப்புக்கொண்டார் விஜயராம். “என் பிரண்ட்க்கு ரூ. 80,000/- கடன் தரணும். அதனால வேற வழியில்லாம இதை பண்ணிட்டேன். கார் சாவியை டிரைவர் கீழே தவறவிட்டதை பார்த்தேன். மாற்று சாவில வண்டியை எடுப்பாங்கனு எதிர்பார்த்தேன். எடுக்கல. அதான் அந்த சாவியை வெச்சு வண்டியை எடுத்திட்டு போயிட்டேன்” என்று விவரித்துள்ளார் விஜயராம்.
காரை மதுரவாயிலிலுள்ள ஓர் ஷெட்டில் நிறுத்தி வைத்துவிட்டு 80,000-க்கு விற்க ஆட்களைத் தேடிவந்துள்ளார். போலீசுக்குப் பயந்து இரண்டு நாட்களாக வேலைக்கும் வரவில்லையாம்.
“இந்த கார் பல லட்சங்களுக்கு போகுங்கிறது கூட தெரியல அவருக்கு” என்கிறார் ஒரு போலீஸ் அதிகாரி. பல லட்சம் விலை போகும் காரை வெறும் 80,000-க்காக திருடிய விஜயராம் இப்போது காவல்துறையின் பிடியில்.
– லெட்சுமி பிரியா