சென்னை

 சென்னை திருவல்லிக்கேணி வி ஆர் பிள்ளை தெருவில் 88 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அனைவரும் குணம் அடைந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் தமிழகத்தில் சென்னை நகர் அதிக அளவில் பாதிப்பில் உள்ளது.  இங்கு இதுவரை 16585 பேர் பாதிக்கப்பட்டு அதில் 150 பேர் உயிரிழந்தனர்.  இதுவரை 8554 பேர் குணமடைந்துள்ளனர்.  பல பாதிக்கப்பட்ட பகுதிகள் மெதுவாகப் பாதிப்பில் இருந்து மீண்டு வருகின்றன.  அதில் திருவல்லிக்கேணி வி ஆர் பிள்ளை தெருவும் ஒன்றாகும்.

சுமார் 1.2 கிமீ நீளமுள்ள இந்த தெருவில் கடந்த மே மாதம் 3 ஆம் தேதி 50 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.  அது ஒரு வாரத்தில் 88 ஆக உயர்ந்தது.   இங்குள்ள ஒரு சமூக ஆர்வலருக்கு முதலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  அதை அறியாமல் அவர் பொதுமக்களுக்கு உணவு விநியோகம் செய்துள்ளார்.  அதன் மூலம் தெரு முழுவதும் பாதிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

தற்போது இங்குள்ள அனைத்து கொரோனா நோயாளிகளும் குணமடைந்துள்ளனர்.  இந்த தெருவில் கடந்த 14 நாட்களாக ஒருவருக்கு கூட கொரோனா  பாதிப்பு ஏற்படவில்லை.  இதையொட்டி இந்த தெரு தடை நீக்கம் செய்யப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ரவிகுமார், “நாங்கள் இந்த தெருவைத் தடை செய்த பகுதியாக அறிவித்து மக்கள் நடமாட்டத்தை முழுவதுமாக நிறுத்தி வைத்தோம்.   ஒவ்வொரு நாளும் ஒரு ஊழியர் தலா 50 வீடுகளுக்குச் சென்று அறிகுறிகள் பற்றி விசாரணை நடத்தினர். அத்துடன் அறிகுறி உள்ளோரை உடனடியாக சோதித்த மருத்துவர்கள் தேவையான சிகிச்சையை அளித்தனர்.

இந்த பகுதியில் உள்ள பொதுக் கழிப்பறை மூலம் தொற்று பரவ மேலும் வாய்ப்பு இருந்ததால் நாங்கள் அவற்றை மூடி தற்காலிக வசதிகளை அளித்தோம்.   வாட்ஸ்அப்  குழுக்கள் மூலம் இங்குள்ள ஆர்வலர்கள் காவல்துறையினருக்கு மிகவும் உதவினர்.  நாள் முழுவதும் டிரோன்கள், ரோபோக்கள் மூலம் தகவல் அளிப்பது, கண்காணிப்பது உள்ளிட்டவை நடந்தன” என தெரிவித்துள்ளார்.

நன்றி : டைம்ஸ் ஆஃப் இந்தியா