கொரோனா வைரஸ் (கோவிட் –19) தடுப்பு மருந்து ஆய்வுகளின் சமீபத்திய முன்னேற்றங்கள் பற்றிய தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன. சினோவாக் பயோடெக் அதன் கொரோனாவாக் தடுப்பு மருந்து செயல்திறனில் 99 சதவீதம் உறுதியாக இருப்பதாக கூறுகிறது. கோவிட் -19 க்கான சிகிச்சையை உருவாக்கும் முயற்சிகளில் பதஞ்சலி குழு இணைகிறது.
கொரோனா வைரஸ் (கோவிட் -19) தடுப்பு மருந்தின் சமீபத்திய தகவல்கள்: கோவிட் -19 க்கு பாதுகாப்பான, பயனுள்ள மற்றும் அணுகக்கூடிய தடுப்பு மருந்தை உருவாக்குவது, தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான திறவுகோலாகக் கருதப்படுவதால், இதற்கான ஒரு சிகிச்சையைக் கண்டறிய உலகம் முழுவதும் ஆராய்ச்சி மற்றும் சோதனைகள் வேகமாக நடந்து வருகின்றன. சமீபத்திய முன்னேற்றங்களில், தடுப்பு மருந்து பந்தயத்தில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களில் ஒன்றான, அமெரிக்காவின், மாடர்னா இன்க், நோயாளிகளுக்கு மருந்துகளை கொடுக்க துவங்க இருப்பதாக கூறியுள்ளது. ரஷ்ய விஞ்ஞானிகள் இரண்டு வாரங்களுக்குள் மனித மருத்துவ பரிசோதனைகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளனர். உலகெங்கிலும் சுமார் 120 தடுப்பு மருந்துகள் க்கண்டுபிடிப்பு செயலில் இருந்தாலும், சுமார் குறைந்தது 10 மருந்துகள் மனித சோதனைகள் கட்டத்தை எட்டியுள்ளன. உலகளவில் கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 61 லட்சத்தையும், இறப்புகளின் எண்ணிக்கை சுமார் 3.8 இலட்சத்தையும் எட்டியுள்ளது. இன்றுவரை, சீனாவின் கேன்சினோ நிறுவனத்தின், அடினோவைரஸ் தடுப்பு மருந்து, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் அடினோவைரஸ் தடுப்பு மருந்து, மாடர்னாவின் mRNA தடுப்பு மருந்து மற்றும் நோவாவாக்ஸ் ஆகியவை கோவிட் -19 க்கான மிகவும் நம்பிக்கைக்குரிய தடுப்பு மருந்துகளாக அறியப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 8,380 புதிய தொற்றுநோய் கொண்ட நோயாளிகளை கொண்டு, மொத்தமாக, 2 இலட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்தியாவில் இருந்து பதஞ்சலி குழுமம் தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளது.
சீனா
சீனாவின் பெய்ஜிங் இன்ஸ்டிடியூட் ஆப் உயிரியல் தயாரிப்புகள் மற்றும் சீனா நேஷனல் பயோடெக் குரூப் நிறுவனம் ஆகியவை இணைந்து அவர்களின் தடுப்பு மருந்தின் இரண்டாம் கட்ட பரிசோதனையை நிறைவு செய்துள்ளது. மேலும், அவர்களின் மருந்து இந்த ஆண்டின் இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சந்தைக்கு வர தயாராக இருக்கலாம் என்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராய்ட்டர்ஸ் மேற்கோள் காட்டிய அந்த அறிக்கையில், தடுப்பு மருந்துக்கான உற்பத்தி பாதை முழுமையாக கிருமி நீக்கம் செய்யப்படும் என்றும், ஒவ்வொரு ஆண்டும் 100 மில்லியன் -120 மில்லியன் தடுப்பு மருந்து டோஸ்கள், முழு உற்பத்தி திறனுடன் உற்பத்தி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பு மருந்தில், கொல்லப்பட்ட அல்லது செயலிழக்கப்பட்ட கொரோனா வைரஸ் பயன்படுத்தப்படுகிறது. எனவே, இது நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும். மொத்தத்தில், வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில், ஐந்து சீன நிறுவனங்களின் தடுப்பு மருந்துகள், மனித பரிசோதனை கட்டத்தை எட்டியுள்ளது.
சினோவாக் பயோடெக்
மற்றொரு சீன மருந்து தயாரிப்பு நிறுவனமான “சினோவாக் பயோடெக்” அதன் செயலிழக்கச் செய்யப்பட்ட வைரஸைக் கொண்ட தடுப்பு மருந்து நல்ல முடிவுகளை அளித்துள்ளதாக நம்பிக்கையை அளித்துள்ளது. இது “கொரோனாவேக்” என அழைக்கப்படுகிறது. மேலும் அதன் செயல்திறன் 99 சதவீதம் உறுதியானது என்று கூறியுள்ளது. ஒரு ஸ்கை நியூஸ் அறிக்கையின்படி, சினோவாக் ஆராய்ச்சியாளரான லூவோ பைஷன், “இது வெற்றிகரமானதாக உள்ளதென்றும், அது 99 சதவீதம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்றும் கூறினார். சினோவாக் நிறுவனம் தனது தடுப்பு மருந்து பரிசோதனையின் 2 ஆம் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் 1000 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும், மூன்றாம கட்ட சோதனைகளை நடத்தும் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது. இதன் இங்கிலாந்து சோதனைகள் அதன் இறுதி கட்டத்தில் உள்ளது. கடந்த மாதம் சயின்ஸ் என்ற ஆய்வு அறிக்கைகளை வெளியிடும் அறிவியல் இதழில், சினோவாக்கின் தடுப்பு மருந்து குரங்குகளை கொரோனா வைரஸ் தொற்றுநோயிலிருந்து பாதுகாத்தது என்று அறிக்கை வெளியிடப்பட்டது. தடுப்பு மருந்தின் வளர்ச்சிக்கு நிதியளிப்பதற்காக சினோவாக்கின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துணை நிறுவனம் தனியார் பங்கு நிறுவனங்களான அட்வாண்டெக் கேபிடல் மற்றும் விவோ கேபிடல் ஆகியவற்றிலிருந்து 15 மில்லியனைப் பெற்றுள்ளது. தவிர, நிறுவனம் 100 மில்லியன் டோஸ் உற்பத்தி செய்ய முடியும் என்ற நோக்கத்துடன், அதன் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை தயாரிக்க ஒரு பெரிய தொழிற்சாலையும் ஒதுக்கியுள்ளது.
மாடர்னா நிறுவனம்
அமெரிக்க நிறுவனமான மாடர்னா இன்க் சமீபத்தில் தனது நோயாளிகளின் மீதான பரிசோதனை துவங்கிவிட்டது என்றும், நோயாளிகளுக்கு மருந்தின் டோஸ்கள் கொடுக்கப்பட்டு வருவதாகவும் தற்போது ஆய்வின் மத்தியில் இருப்பதாகவும் தெரிவித்தது. மேலும், இந்த ஆய்வின் இறுதியில் 600 நோயாளிகளை சோதனைக்கு உட்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறியது. இந்த நடவடிக்கை நிறுவனத்தின் mRNA தடுப்பு மருந்து அதன் ஆரம்ப பாதுகாப்பு சோதனைகளை கடந்துவிட்டது என்பதைக் குறிக்கிறது. மாடர்னா ஜூலை மாதத்தின் பிற்பகுதியில் சோதனைகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளது என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
ஒரு செய்திக்குறிப்பில், மாடெர்னா, சோதனையின் முதல்கட்டத்தில் பங்கேற்கும் 55 வயதுக்குக் குறைவான மற்றும் அதற்கு மேற்பட்ட முதல் பங்கேற்ப்பாளர்கள் நிறுவனத்தின் மருந்தின் அளவை பெற்றதாகக் கூறினர். இந்த மாத தொடக்கத்தில், மாடர்னா ஆரம்ப கட்ட தரவுகளை வெளியிட்டது. இதன்படி, இந்த தடுப்பு மருந்து ஆரோக்கியமான தன்னார்வலர்களின் ஒரு சிறிய குழுவினருக்கு, வைரஸுக்கு எதிரான பாதுகாப்பு ஆன்டிபாடிகளை வெற்றிகரமாக உருவாக்கியது. இருப்பினும், இது சில பக்க விளைவுகளை கொடுத்ததையும் எடுத்துக்காட்டியிருந்தது.
இரஷ்யா
அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது மிக உயர்ந்த கோவிட் -19 உறுதிப்படுத்தப்பட்ட எண்ணிக்கையைக் கொண்ட ரஷ்யா, ஒரு தடுப்பு மருந்தின் சோதனைகளை இன்னும் இரண்டு வாரங்களுக்குள் தொடங்க திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளது. மேலும், நாட்டின் முதல் கோவிட் எதிர்ப்பு மருந்துக்கும் அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் அறிக்கை தெரிவித்துள்ளது. நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் கிட்டத்தட்ட 50 வெவ்வேறு தடுப்பு மருந்து திட்டங்களில் பணியாற்றி வருவதாக கிரெம்ளின் அதிகாரிகள் தெரிவித்தனர். “சோதனைகள் நடைபெற்று வருகின்றன, அடுத்த இரண்டு வாரங்களில் மருத்துவ பரிசோதனைகளைத் தொடங்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்” என்று சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ கூறியிருந்தார். சோதனைகளில் பங்கேற்க தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றார். தடுப்பு மருந்துகளில் ஒன்றை சைபீரியாவில் உள்ள அரசு நடத்தும் வெக்டர் நிறுவனம் உருவாக்கி வருகிறது. சனிக்கிழமையன்று, அதன் இயக்குநர் ஜெனரல் ரினாட் மக்யுடோவ், செப்டம்பர் மாத மத்தியில், மருத்துவ பரிசோதனைகளை முடிக்க முடியும் என்று நம்புவதாகக் கூறினார். விலங்குகள் மீதான தடுப்பு மருந்து பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிந்ததாகவும் மக்ஷ்யூடோவ் கூறினார். இதற்கிடையில், ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் கோவிட் -19 சிகிச்சையளிக்க அவிஃபாவிருக்கு சுகாதார அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது என்றார். இது ஃபாவிபிராவிர் என்று பொதுவாக அறியப்படும் ஒரு மருந்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இந்த மருந்து அதன் மருத்துவ பரிசோதனைகளின் முதல் கட்டத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் மிகவும் பயனுள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. 330 நோயாளிகளின் பங்களிப்புடன், மருத்துவ பரிசோதனைகளின் இறுதி கட்டம் நடந்து வருகிறது.
அமெரிக்கா
அமெரிக்க மருந்து நிறுவனமான ஃபைசர், கோவிட் -19 தடுப்பு மருந்து ஒன்றை, ஜெர்மன் நிறுவனமான பயோன்டெக்குடன் இணைந்து உருவாக்கி வருகிறது. இது அக்டோபர் 2020 இறுதிக்குள் தயாராகலாம் என்று கூறியுள்ளது. “பரிசோதனைகள் அனைத்தும் சரியாக நடந்து, முடிவுகள் மிகச்சரியாக அமையுமானால், அக்டோபர் மாத இறுதியில் ஒரு தடுப்பு மருந்து தயாராக இருக்கும் என்பதற்காக பாதுகாப்பு மற்றும் செயல்திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளோம்” என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆல்பர்ட் பவுர்லா ஒரு நிகழ்வில் கூறினார். பி.என்.டி.162 தடுப்பு மருந்துக்கான சோதனைகளை ஃபைசர் நிறுவனம் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நடத்த திட்டமிட்டு வருகிறது. இந்த திட்டத்தில் நான்கு தடுப்பு மருந்துகள் உள்ளன. ஒவ்வொன்றும் mRNA மற்றும் அளிக்கப்பட வேண்டிய இலக்கான ஆன்டிஜென் எனப்படும் நோயுண்டாக்கும் பகுதியை கொண்ட கலவையாக இருக்கும். “நான்கு மாதங்களுக்கும் குறைவான காலக்கெடுவுக்குள், ஆரம்பகட்ட சோதனைகளில் இருந்து மனித சோதனைக்கு எங்களால் செல்ல முடிந்தது,” என்று அவர் மேலும் கூறினார்.
விரைவில் இம்மருந்துகள் வெளிவருவது மக்களுக்கு நன்மையளிப்பதாக இருக்கும்!
தமிழில்: லயா