சென்னை
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்து வருவதால், அதை தடுப்பது குறித்து, தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் உச்சம் அடைந்து வருகிறது. அதிகப்பட்சமாக நேற்று ஒரே நாளில் சென்னையில் 972 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் தொற்று எண்ணிக்கை 15,770 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய 1,162 என்கிற மொத்த தொற்று எண்ணிக்கையில் 83.72 சதவீதத் தொற்று சென்னையில் (972) உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 23,495-ல் சென்னையில் மட்டும் 15,570 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த தமிழக எண்ணிக்கையில் 66.26 சதவீதம் ஆகும். அதுபோல கொரோனாவுக்கு தமிழகத்தில் உயிரிழந்த 184 பேரில்138 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.
இந்த நிலையில் சென்னையில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், தீவிர நடவடிக்கை எடுப்பது குறித்து, தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ், சிஎம்டிஏ அதிகாரி கார்த்திகேயன், டிஜிபி திரிபாதி, சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், மற்றும் 14 மண்டலங்களுக்கான அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் சென்னை மாநகராட்சி வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் ஆலோசனை நடத்தினார்.
இதில், சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் குடிசைப் பகுதியில் நீண்ட நாள் நோய், சர்க்கரை, நீரிழிவு போன்ற நோயுள்ளவர்கள், வயதானவர்களைக் கண்டறிந்து 7 நாட்கள் அரசு முகாமில் தங்கவைக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்படுவது மற்றும், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு எடுக்கப்படும் முடிவுகள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.