டில்லி

ரடங்கு அமலாக்கப்பட்டுள்ள நேரத்தில் வீட்டில் வேலை செய்யும் பணியாட்களில் 85% பேருக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என ஒரு கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நாடெங்கும் மார்ச் 25 முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் பல அலுவலகங்கள், வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால் பலரால் பணிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.  இவ்வாறு  பாதிக்கப்பட்டோருக்கு ஊதியம் வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டது.

ஆனால் வீட்டுப் பணி புரிவோர் அமைப்பு சாரா தொழிலாளர் என்பதால் இவர்களில் பலரும் ஊதியம் இன்றி  தவித்து வருகின்றனர்.  இது குறித்து அகில இந்திய அளவில் ஒரு கணக்கெடுப்பு நடந்துள்ளது.  இந்த கணக்கெடுப்பில் வீட்டுப்பணி புரியும் ஊழியர்களில் சுமார் 85%  பேருக்கு ஊரடங்கு நேரத்தில் ஊதியம் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி இருந்தது தெரிய வந்துள்ளது.

 இவர்களில் பலருக்கு கொரோனா தொற்று குறித்த எவ்வித புரிதலும் இல்லாமல் இருந்துள்ளனர்.   ஊரடங்கு காரணமாகப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு இதனால் பணிக்குச் செல்ல முடியாததால் பலர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு நேரத்தில் பணியில் இருந்து யாரையும் நீக்கக் கூடாது என்பதும் வேலைக்கு வராவிட்டாலும் முழு ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பதும் சுமார் 98.5% பேருக்குத் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.