சென்னை:

கொரோனா பாதித்த சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணை ஊழியர்  உயிரிழந்த நிலையில்,  இன்று மட்டும் சென்னையில் 10 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகம் முழுவதும் கொரோனா  ஊரடங்கு  தளர்வுகளுடன் ஜூன் 30ந்தேதி நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனால், சென்னையில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

நேற்று 1149 பேருக்கு தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 22333ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 804 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. எனவே சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 14802ஆக அதிகரித்துள்ளது. அதேபோல நேற்று ஒரேநாளில் மட்டும்  13 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 173ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணையில் பணிபுரிந்த ஊழியர்கள் சிலருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதால், சென்னையில் சில நாட்கள் பால் தட்டுப்பாடு நிலவியது.  கொரோனா தொற்று பரவிய ஆவின் ஊழியர்களில் ஒருவர்  கடந்த 26ம் தேதி ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சை இன்று  பலனின்றி உயிரிழந்துள்ளதாக  அறிவிக்கப்பட்டு உள்ளது.  இவர் மட்டுமின்றி மற்ற அரசு மருத்துவமனைகளில் மேலும் 9 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில், இன்று  இன்று ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.