ஓட்டல்களில் சென்று உணவருந்தும் அனுபவம் இனி வித்தியாசமானதாக இருக்கப்போகின்றது.
அரசு வரும் 8-ம் தேதியிலிருந்து ஓட்டல்களை திறக்க கடுமையான கட்டுப்பாடுகளுடன் அனுமதியளித்துள்ளது. அதன்படி குளிர்சாதன பெட்டிகளை இயக்கக்கூடாது. பார்ட்டி போன்ற நிகழ்வுகளுக்கு தடை. மொத்த இருக்கைகளில் 50% மட்டுமே பறிமாற உபயோகிக்க வேண்டும். ஒரு டேபிளுக்கு இருவர் மட்டுமே அனுமதி. டேபிள்களுக்கு இடையே அக்ரலிக் சீட்கள் வைத்து தடுப்பு ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
உங்களுக்கு தேவையான ஆர்டர்கள் அனைத்தையும் மொத்தமாக முதலிலேயே சொல்லிவிட வேண்டும். பெரும்பாலும் செல்ஃப் சர்வீஸ் தான். அதுவும் சமூக இடைவெளியுடன் வரிசையில் நின்று தான் வாங்கிச்செல்ல வேண்டும் என்பதெல்லாம் அரசு அறிவித்திருக்கும் கட்டுப்பாடுகள்.
ஓட்டல்களை திறக்க அரசு அனுமதித்தது பெரும் மகிழ்ச்சியை அளித்திருந்தாலும் பணியாட்கள் பற்றாக்குறை மிகப்பெரும் சவாலாக இருக்கிறதாம்.
“70% பணியாட்கள் வெளிமாநிலத்தவர்கள். 20% வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள். தற்போது மீதமுள்ள 10% பணியாட்களை வைத்தே நாங்கள் தொழிலை நடத்தியாக வேண்டியுள்ளது.
நார்த் இண்டியன் மற்றும் சைனீஸ் வகைகளை சமைக்க ஆட்கள் இல்லாத சூழலில் வெறும் தென்னிந்திய உணவு வகைகளை மட்டுமே பறிமாறியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். 90-களில் நாம் பார்த்த மெனு கார்டுகளை தான் இனி ஓட்டல்களில் பார்க்க முடியும்” என்கிறார் ஓட்டல்கள் சங்கத்தலைவர் ரவி.
– லெட்சுமி பிரியா