மும்பை
குஜராத், மகாராஷ்டிரா,டில்லியில் கொரோனா அதிக அளவில் பரவ மோடி நிகழ்த்திய நமஸ்தே டிரம்ப் நிகழ்வு தான் காரணம் என சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது.
கொரோனா தொற்று இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. கடந்த மார்ச் 25 முதலூரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மிக அதிக அளவில் பாதிப்பு அடைந்துள்ளனர். இங்கு 65000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு அதில் சுமார் 2200 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இது குறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளடேனா சாம்னாவில் ஒரு கட்டுரையில் அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் ரவுத்,” கொரோனா வைரஸ் குஜராத் மாநிலத்தில் தீவிரமாக பரவுவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை அழைத்துவந்து மிகப்பெரிய அளவில் மக்களைக் கூட்டத்தை அழைத்து பிரதமர் மோடி நடத்திய நமஸ்தே டிரம்ப் நிகழ்வுதான் காரணம் என்று கூறுவதை மறுக்க முடியாது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன் வந்த சில அமெரிக்க அதிகாரிகள் மும்பை, டெல்லிக்கும் சென்று கரோனா வைரஸைப் பரப்பி வி்ட்டார்கள்
கடந்த மார்ச் 20-ம் தேதி குஜராத்தில் முதன்முதலாக ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார் தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கு உயிரிழந்துள்ளனர், சுமார் 16 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாததால் உத்தவ்தாக்கரே அரசைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவர முயல்வது தற்கொலைக்கு சமமான முடிவாகும். 6 மாதங்களுக்கு முன்பு இங்கு எவ்வாறு குடியரசுத் தலைவர் ஆட்சி வந்தது, எப்படி அகற்றப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும்
ஒருவேளை கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த தவறியதால் குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவருவதாக இருந்தால் நாட்டில் 17 மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவர வேண்டும்.
குறிப்பாக அதில் பாஜக ஆளும் மாநிலங்களிலும் கொண்டு வர வேண்டும். மத்திய அரசு கூட கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் தோல்வி அடைந்துவிட்டது,
எந்த திட்டமிடலும் இல்லாமல் மத்திய அரசு கொண்டுவந்த ஊரடங்கு தோல்வி அடைந்துவிட்டது என காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி அருமையான ஆய்வுகள் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஏற்கனவே மத்திய அரசு எந்தவிதமான திட்டமிடலும் இல்லாமல் ஊரடங்கை நடைமுறைப் படுத்தியது, இப்போது எந்தவிதமான திட்டமிடலும் இல்லாமல், ஊரடங்கைத் தளர்த்தும் விஷயத்தை மாநிலங்களிடம் ஒப்படைத்துவிட்டது. கொரோனா சிக்கலை இது போன்ற குழப்பம் மேலும் மோசமாக்கும்
கொரோனா வைரஸ் மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகரித்து வருவதற்காக ஆட்சியைக் கலைத்துவிட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவர சில பாஜகவினர் கோருவது வியப்பாக இருக்கிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சி நடத்தும் மகாவிகாஸ் அகாதி அரசில் 3 கட்சிகளும் ஒருவிதமான கட்டுப்பாட்டுடன் இருக்கின்றன. இந்த மூன்று கட்சிகளுக்குள் முரண்பாடு இருந்தாலும் அரசுக்கு எந்த விதமான சிக்கலும் இல்லை.
முன்பு பாஜக, சிவேசனா கூட்டணி அரசில் முரண்பாடு இருந்தபோதிலும், பட்னாவிஸ் அரசுக்கு எந்தவிதமான ஆபத்தும் கடைசிவரை வரவில்லை. எங்கள் கட்சி அமைச்சர்கள் சட்டைப்பாக்கெட்டில் ராஜினாமா கடிதத்தோடு பணிபுரிந்தபோதிலும் கூட பட்னாவிஸ் அரசுக்கு எந்தவிதமான சேதத்தையும் ஏற்படுத்தவில்லை.
மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் ஆட்சி அமையக் காரணமாக இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் புகழ்பெற்ற தலைவர் என்பதால் அவரால்தான் அரசின் எதிர்காலத்தைக் கணிக்க முடியும்.
தற்போதைய மகாராஷ்டிரா அரசு நிலையாக இருக்கும் என உறுதியாகச் சொல்ல முடியும், ஏனெனில் காங்கிரஸ் கட்சியும் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் எங்கும் செல்லாது. இந்த கூட்டணியில் உள்ளவர்கள் யாரும் குதிரை பேரத்துக்கு மசியமாட்டார்கள்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.