கொல்கத்தா
வரும் ஐந்தாம் கட்ட ஊரடங்கில் பல விதிகள் தளர்வை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
கொரோனா பரவுதல் காரணமாக மத்திய அரசு அறிவித்திருந்த நான்காம் கட்ட ஊரடங்கு முடிவுக்கு வருகிறது. ஆனால் கொரோனாவின் தாக்கம் இன்னும் கட்டுக்குள் வராமல் உள்ள்த் எனவே அடுத்த கட்ட ஊரடங்கு தொடங்க உள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்திப்பு ஒன்றை நிகழ்த்தினார். அப்போது அவர் ஊரடங்கு விதிகள் தளர்வு குறித்து விளக்கம் அளித்தார்.
முதல்வர் மம்தா பானர்ஜி, “அனைத்து வழிபாட்டுத் தலங்களும் ஜூன் 1 முதல் திறக்கப்படும். ஆனால் 10 பேருக்கு மேல் அங்கு மக்கள் கூடுவதற்கு அனுமதி கிடையாது. அனைத்து மத தலங்களிலும் சுகாதார விதிகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும். இந்த விதியை அனைத்து மத தலைவர்களும் கடைப்பிடிப்பார்கள் என நம்புகிறேன்.
மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார்த் துறை பணியாளர்கள் வரும் ஜூன் மாதம் 8 ஆம் தேடி அன்று பணிக்குத் திரும்ப வேண்டும். அதே வேளையில் பள்ளிகள் ஜூன் இறுதி வரை திறக்கப்பட மாட்டாது. தற்போது மேற்கு வங்கத்துக்கு வந்துள்ள புலம் பெயர் தொழிலாளர்கள் பள்ளிக்கூட கட்டிடங்களில் தனிமை படுத்தப்பட்டுள்ளதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள.
புலம்பெயர் தொழிலாளர்கள் மேற்கு வங்கத்துக்குத் திரும்பியதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் அவர்களை ஏன் ரயில்களில் அடைத்து மத்திய அரசு அனுப்பி வைத்தது எனக் கேட்க விரும்புகிறேன். நான் ரயில்வே அமைச்சராகப் பணி புரிந்துள்ளேன். எனவே அதிக ரயில்களை இயக்கவோ அல்லது கூடுதல் பெட்டிகளைச் சேர்க்கவோ ரயில்வே துறையால் முடியும் என்பதை நான் அறிவேன்.
புலம்பெயர் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் மகாராஷ்டிர, குஜராத், தமிழகம், டில்லி போன்ற ஹாட் ஸ்பாட் மாநிலங்களில் இருந்து வந்துள்ளனர். அப்படியிருக்க ரயில்வே ஏன் அதிக ரயில்களை இயக்கி சமூக இடைவெளியுடன் இவர்களை அழைத்து வரவில்லை? இவர்களுக்கு உணவும் குடிநீரும் வழங்கவில்லை. இந்த ரயில்களில் ஒரு சில இடங்களில் மொத்த எண்ணிக்கையை விட இருமடங்கு பேர் ஏற்றப்பட்டுள்ளனர். இது ஷார்மிக் ரயிலா அல்லது கொரோனா ரயிலா?” எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.