உடலை எரிக்க எதிர்ப்பு.. மறுபடியும் ஒரு சர்ச்சை..
எத்தனையோ எச்சரிக்கைகளை அரசு வெளியிட்டும் இன்னமும் ஆம்புலன்ஸ் மூலம் எடுத்து வரப்படும் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய சுடுகாட்டின் அருகில் வசிப்போர் கடுமையாக எதிர்ப்பு தெரிவிப்பது தொடர்ந்து வருவது பெரும் அவலம்.
அஸ்ஸாம் மாநிலத்தைச்சேர்ந்த 25 வயது நஜ்முல் என்பவர் திருப்போரூரில் ஓர் தனியார் நிறுவன உதவியாளர். ஊரடங்கினால் இங்கேயே தங்கிவிட்ட இவர் கடந்த வாரம் ஏற்பட்ட வயிற்றுப்போக்கின் காரணமாகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அங்கே எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் இவருக்கு கொரோனா இல்லையென உறுதி செய்யப்பட்ட நிலையில் செவ்வாய் இரவு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இவரின் நிறுவன உரிமையாளர் முறைப்படி இவரது பெற்றோர் மற்றும் காவல்துறைக்குத் தகவல் அளிக்க, இவரின் பெற்றோரும் உடனடியாக வந்து சேர்ந்து உடலை இங்கேயே அடக்கம் செய்யவும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
உடனே ஒரு ஆம்புலன்ஸ் மூலமாக இவரின் உடலை எடுத்துச்சென்று பெத்தேல் நகர் இடுகாட்டில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர். ஆனால் அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் இறந்தவர் கொரோனா தொற்று உடையவராக இருக்கலாம் என்கிற சந்தேகத்தில் ஆம்புலன்ஸ் வாகனத்தை வழிமறித்து உடன் வந்த காவல்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் இவர்கள் அனைவரும் காவல்துறையினரின் எச்சரிக்கையையும் மதிக்காமல் அடக்கம் செய்ய அனுமதிக்காத நிலையில் வேறு வழியின்றி இவரது உடலை அருகிலிருந்த ஓர் முஸ்லீம் கல்லறைக்கு எடுத்துச்சென்று அடக்கம் செய்துள்ளனர்.
“இங்க எல்லாருமே ஒரே மாதிரி தான் இருக்காங்க சார். நாம எவ்ளோ எடுத்து சொன்னாலும் புரிஞ்சுக்கிறதில்ல. இது கொரோனாவை விட கொடுமையானது. முதல்ல இது சம்பந்தமா பெரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தணும்” என்கிறார் ஒரு காவல் அதிகார மிகவும் வருத்தத்துடன்.
– லெட்சுமி பிரியா