30 ஆயிரம் திருமணங்களை நிறுத்திய கொரோனா…
அனைத்து துறைகளையும் முடக்கிப்போட்ட கொரோனா, சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களையும் விட்டு வைக்கவில்லை.
அரிதாக ஒன்றிரண்டு பேர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கல்யாணம் செய்துள்ளனர்.
கோயில்களில், மாநில எல்லைகளில் சிற்சில திருமணங்கள் நடந்துள்ளன.
மார்ச் மாதமும், ஏப்ரல் மாதமும் திருமண சீசன் காலம்.
கல்யாண ஏற்பாட்டாளர்களுக்கு , இந்த சீசனில் தான் கையில் காசு புரளும்.
அதைக் கெடுத்து விட்டது,கொரோனா.
குஜராத் மாநிலத்தில் மட்டும் மார்ச்-ஏப்ரலில் நடப்பதாக இருந்த 30 ஆயிரம் திருமணங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார், அங்குள்ள திருமண ஏற்பாட்டாளர் தேவங் ஷா என்பவர்.
மே மாதம் 18 ஆம் தேதி ஊரடங்கில் இருந்து சில விலக்குகள் அளிக்கப்பட்டாலும், ஓட்டல்கள், கோயில்களில் கல்யாணம் நடத்த அனுமதி இல்லாததால், முகூர்த்தங்கள் வீணாகிப்போயின.
ஒத்தி வைக்கப்பட்ட திருமணங்கள் இனி எப்போது தான் நடக்கும்?
‘’ இப்போதைக்கு நல்ல நாள் இல்லை. ஏற்கனவே பேசி முடிக்கப்பட்ட கல்யாணங்கள் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடக்கும் வாய்ப்புகள் உள்ளன ‘’ என்கிறார், தேவங் ஷா.
– ஏழுமலை வெங்கடேசன்