சிறப்புக்கட்டுரை: ஆ. கோபண்ணா ஆசிரியர், தேசிய முரசு
விடுதலைப் போராட்டக் காலத்தில் காந்தியடிகளின் தலைமையை ஏற்று பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று 3259 நாட்கள் சிறைவாசம் அனுபவித்து 1947 இல் இந்தியாவின் பிரதமராக ஜவஹர்லால் நேரு பொறுப்பேற்று 17 ஆண்டுகாலம் ஆட்சி செய்தார். இவரை நவஇந்தியாவின் சிற்பி என்று வரலாறு அழைத்து மகிழ்ந்தது.
இந்திய நாடு சுதந்திரம் பெற்ற போது உலகத்தின் ஒட்டுமொத்த உற்பத்தியில் மிக மிக குறைவான உற்பத்தியை செய்து வந்த இந்தியா, உலகத்தின் மிக ஏழை நாடுகளில் ஒன்றாக தர வரிசைப் படுத்தப்பட்டிருந்தது. 200 ஆண்டுகால ஆங்கிலேயர்களின் சுரண்டல் ஆட்சிக்கு பிறகு 30 கோடி மக்கள் கொண்ட நாடாக திக்கற்ற நிலையில், ஆதரவின்றி விடப்பட்டது. 1943 இல் நடந்த வங்காள பஞ்சத்தில் 30 லட்சம் இந்திய மக்கள் செத்து மடிந்தனர். இத்தகைய மிக மோசமான பொருளாதார பின்னணியில் இந்தியாவின் பிரதமராக நேரு பொறுப்பேற்றார்.
வறுமையிலும், வளர்ச்சியின்மையிலும் உழன்று கொண்டிருந்த இந்தியாவை, வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதற்கு தமது ஆட்சிக் காலத்தில் கடுமையான முயற்சிகளை கொண்டார். திட்டமிட்ட பொருளாதாரத்தின் மூலமாக வளர்ச்சியை நோக்கி இந்தியா அவரது தலைமையில் பீடுநடை போட்டது.
அன்றைய சுதந்திர இந்தியாவின் நிலையை அடிப்படையாக வைத்து தான் அவரது சாதனைகளை பார்க்க வேண்டும். 1947-48 இல் சமர்ப்பிக்கப்பட்ட முதல் பட்ஜெட் தொகை ரூபாய் 178.77 கோடி. அவரது ஆட்சியின் இறுதியில் 1964-65 இல் சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட் தொகை ரூபாய் 2095 கோடி. நேருவின் ஆட்சியில் ஆண்டுதோறும் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து பட்ஜெட்டுகளின் மொத்த தொகை ரூபாய் 12,151 கோடி. ஆனால், சமீபத்தில் மத்திய அரசு 2019-20 ஆம் ஆண்டுக்கு சமர்ப்பித்த பட்ஜெட் தொகை ரூபாய் 27 லட்சத்து 86 ஆயிரத்து 349 கோடி. இந்தப் பின்னணியில் தான் நேரு அரசின் சாதனைகளை மதிப்பீடு செய்ய வேண்டம். இதோ நேரு அரசின் துறை வாரியான சாதனைகள் :
விவசாயம் :
1957: மத்திய பொருள் கிடங்குக் கழகம் அதன் பணிகளைத் தொடங்கியது. இந்தியாவில், முதன்மையான ஒன்றாக இது உருவானது. விவசாய உற்பத்திப் பொருள்களைப் பாதுகாக்க இது உதவியது. 1964: இந்திய உணவுக் கழகம் (FCI) அமைக்கப்பட்டது.
நீர்ப் பாசனம் :
1948 : தாமோதர் பள்ளத்தாக்குக் கழகம் (Damodar Valley Corporation) உருவானது. அமெரிக்காவில் உள்ள டென்னசி பள்ளத்தாக்கு ஆணையம் போலவே இது உருவானது. 1943 இல் தாமோதர் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை அடுத்து, அங்கு ஏற்பட்ட பிரச்சினைகளைச் சமாளிப்பதற்காக இது உருவாக்கப்பட்டது. 1948 ஜூலை 7இல் இந்திய அரசு மேற்கொண்ட முதல் பன்நோக்குத் திட்டம் இதுவாகும். ஹிராகுட் அணைக்கும், புவனேஸ்வரில் உருவாக இருந்த ஒரிசாவின் தலைநகருக்கும் ஏப்ரல் 12 அன்று நேரு அடிக்கல் நாட்டினார்.
1954: ஜூலை 8 அன்று உலகின் மிகப்பெரிய பக்ரா நங்கல் கால்வாய் கட்டமைப்பை நேரு தொடங்கிவைத்தார். ‘அணைகள், வழிபடவேண்டிய ஆலயங்கள்” என்று நேரு குறிப்பிட்டார்.
1955 : அக்டோபர் 15 அன்று, ஹசாரிபாக் மாவட்டத்தில், தாமோதர் பள்ளத்தாக்குக் கழகத்தின் திட்டமான கொனார் அணையை ஜவஹர்லால் நேரு திறந்து வைத்தார்.
1960 : கிருஷ்ணா நதிமீது நாகர்ஜுனா சாகர் அணை கட்டுமானம் நிறைவடைந்தது.
1960: சிந்து நதிநீர் ஒப்பந்தம் கையெழுத்தானது. உலகின் மிகப்பெரிய நீர்ப்பாசன அமைப்பைக் கட்டமைக்க இது உதவியது. கராச்சியில், பாகிஸ்தான் அதிபர் பீல்ட் மார்ஷல் அயூப் கானும், இந்தியப் பிரதமர் பண்டித நேருவும், உலக வங்கியின் துணைத் தலைவர் று.யு.டீ.இலிப் என்பவரும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.
1963 : ஜனவரி 7 அன்று வாரணாசியில் இருந்து 130 மைல் தொலைவில் உள்ள பிப்ரியில் ரிஹந்த் அணையைப் பிரதமர் தொடங்கிவைத்தார். ரிஹந்த் நதிமீது கட்டப்பட்ட இந்த அணை, நீர் மின்சார உற்பத்திக்குக்கும் நீர்ப்பாசனத்திற்குமான நீரைத் தேக்கிவைக்க உதவுகிறது. இப்படி உருவாக்கப்பட்டுள்ள இந்த நீர்த்தேக்கம் ஆசியாவிலேயே மிகப்பெரிய செயற்கை ஏரியாகத் திகழ்கிறது.
1963 அக்டோபர் 22 அன்று, 740 அடி உயர பக்ரா நங்கல் அணையைப் பிரதமர் நேரு நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
தொழில்
1948: தொலைபேசி சாதனங்களைத் தயாரிக்க பெங்களூரில் இந்தியத் தொலைபேசி தொழிலகம் (The Indian Telephone Industries) அமைக்கப்பட்டது. தொழிற்கொள்கைத் தீர்மானம் ஒன்றை ஏப்ரல் 8 அன்று பாராளுமன்றம் நிறைவேற்றியது. தொழில் வளர்ச்சியிலும், பொதுத்துறை, தனியார் துறைகளிலும் அரசாங்கக் கொள்கையின் விரிவான நோக்கங்களை இது வழிவகுத்தது. தொழிலாளர்களுக்கு நியாயமான கூலி வழங்கவேண்டியதை இது அங்கீகரித்தது. ஒரிசாவில் டால்மியா சிமண்ட் ஆலை நிறுவப்பட்டது.
1950: நவம்பர் 1 அன்று, சித்தரஞ்சன் ரயில் எஞ்ஜின் தொழிற்சாலையை டாக்டர் ராஜேந்திர பிரசாத் தொடங்கி வைத்தார். சிந்தியாவின் கிழக்குக் கப்பல் கழகத்துடன் ஏற்பட்ட ஒப்பந்தப்படி இந்தியாவின் முதல் பொதுத்துறைக் கப்பல் கழகம் அமைக்கப்பட்டது.
1951: தொழிற்சாலைகளுக்கு உரிமம் வழங்குதல், புதிய தொழில்களுக்கு அனுமதி வழங்குதல், நடைபெற்றுவரும் தொழில்களை விரிவாக்கம் செய்தல் ஆகியவற்றில் அரசாங்கத்தின் கட்டுப்பாடு குறித்த தொழில் வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறைச் சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
1952: சென்னை பெரம்பூரில் ஒருங்கிணைந்த ரயில் பெட்டித் தொழிற்சாலை (ICF) நிறுவப்பட்டது. 1952 மார்ச் 2 அன்று, சிந்திரி உரத் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டது. 1953: ஹிந்துஸ்தான் மெஷின் டூல்ஸ் (HMT) உருவாக்கப்பட்டுப் பலவிதமான தொழில் உபகரணங்களை உற்பத்தி செய்யத் தொடங்கியது.
1954: அரசாங்கத்திற்குச் சொந்தமான பிம்ப்ரி ஆலையிலிருந்து பென்சிலின் மருந்து தயாரிக்கப்பட்டது. பின்னாளில் இந்த ஆலைக்கு ஹிந்துஸ்தான் ஆன்டிபயாடிக்ஸ் லிமிடெட் என்று பெயர் சூட்டப்பட்டது. 1955: ஜூன் 15 அன்று, இரும்பு, எக்கு அமைச்சகம் உருவானது.
இந்தியாவின் முதல் பத்திரிகை காகித ஆலை (News Print), மத்தியப் பிரதேசத்தில் நேபா நகரில் ஜனவரி 11 அன்று உற்பத்தியைத் தொடங்கிற்று.
சென்னை பெரம்பூரில் ஒருங்கிணைந்த ரயில் பெட்டித் தொழிற்சாலையை அக்டோபர் 2 அன்று ஜவஹர்லால் நேரு தொடங்கி வைத்தார். பெங்களூரில் ஹிந்துஸ்தான் மெஷின் டூல்ஸ் (HMT) ஆலையை ஜவஹர்லால் நேரு தொடங்கி வைத்தார்.
வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயுவை (LPG) பாரத் பெட்ரோலியம் லிமிடெட் இந்தியாவில் முதன்முதலில் சந்தைப்படுத்தியது. தொழிற் கடன் மற்றும் முதலீட்டுக் கழகம் (Industrial Credit and Investment Corporation – ICIC) அமைக்கப்பட்டது.
1956: தனியார் துறையினரின் ஆதிக்க வரம்பிலிருந்த 29 பெருந்தொழில்களைத் தொழிற்கொள்கை பற்றிய தீர்மானம் விலக்கி வைத்தது.
போபாலில் பாரத மிகு மின் நிறுவனம் (BHEL) லண்டன் தொழில் நுட்ப உதவியுடன் அமைக்கப்பட்டது. தற்போது அமெரிக்காவிற்கு வெளியில் உள்ள 500 பெரிய நிறுவனங்களில் ஒன்றாக இது பட்டியலிடப்பட்டுள்ளது.
1958: டிசம்பரில், இந்திய அரசாங்கம் கனரகப் பொறியியல் கழகத்தை (Heavy Engineering Corporation) அமைத்தது.
1959: ரூர்கேலா (பிப்ரவரி 3), பிலாய் (பிப்ரவரி 4), துர்காப்பூர் (டிசம்பர் 29), இரும்பு உருக்கு ஆலைகளின் முதல் ஊது உலைகள் தொடங்கிவைக்கப்பட்டன.
இந்திய எண்ணெய்க் கழகம் (Indian Oil Corporation – IOC) விற்பனை அமைப்பாக உருவானது.
பாரத் இரும்புக்குழாய் நிறுவனம் ஒருங்கிணைக்கப்பட்டது.
1960: ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனம் ஊட்டியில் அமைக்கப்பட்டது.
ஹிந்துஸ்தான் டெலி பிரிண்டர்ஸ் லிமிடெட், பொதுத்துறை நிறுவனமாக உருவானது.
1962: மைசூர் அரசாங்கத்தால் எடுத்துக்கொள்ளப்பட்ட கோலார் தங்கச்சுரங்கம், இந்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டது.
1963: சித்தரஞ்சனில் கட்டப்பட்ட பயணிகள் ரயில் எஞ்ஜின் தயாரிப்பு நிறுவனப் பணிகள் மார்ச் 11 அன்று தொடங்கின.
வாரணாசி டீசல் எஞ்சின் பணிமனையில் ரயில்வே டீசல் எஞ்சின் உற்பத்தி தொடங்கியது. உள்நாட்டிலேயே முதன்முதலாக டீசல் எஞ்ஜின்கள் தயாரிக்கப்பட்டன. கொச்சின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை நிறுவப்பட்டது.
உள்கட்டமைப்பு
1951: தில்லி – மாஸ்கோ நேரடித் தொலைபேசித் தொடர்பு ஆரம்பிக்கப்பட்டது. கிராமப்புற அஞ்சலகங்களில் தொலைத்தொடர்பு வசதியை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.
1952: ஹிந்துஸ்தான் கப்பல் கட்டுமான நிறுவனம் உருவாக்கப்பட்டது. இது ஒரு முழுமையான பொதுத்துறை நிறுவனமாக 1961இல் மாற்றம் கண்டது.
1958: ஜூலை மாதம், தண்டகாரண்ய மேம்பாட்டு ஆணையத்தை அமைக்க இந்திய அரசு முடிவு மேற்கொண்டது.
1960: மார்ச் 15 அன்று, சம்பல் நதியின் மீது பாலம் திறக்கப்பட்டது. இது வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய நதி என்பதால், இந்தப் பாலம் மூழ்கி இருக்கும் போதும் இயங்கக்கூடிய பாலமாகக் கட்டப்பட்டது. நதியின் ஆழத்திலிருந்து 90 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட இந்தப் பாலம் உலகிலேயே உயரமான பாலங்களில் ஒன்றாகும்.
1962: ஆயில் இந்தியா லிமிடெட் (Oil India Limited), ஆசியாவிலேயே முதலாவதாக முழுவதும் தானாகவே இயங்கும் தன்மைகொண்ட 1,400 கிலோ மீட்டர் நீள குழாய் அமைப்பினை, நாட்டின் பல பகுதிகளில் குறுக்கும் நெடுக்குமாக அமைத்து உருவாக்கியது.
1964: அஸ்ஸாமில் சுபன்ஸ்ரீ ஆற்றின் மீது இரண்டாவது மிக நீளமான ரயில்வே பாலம் திறந்துவைக்கப்பட்டது.
மின் உற்பத்தி
1953: பிப்ரவரி 21 அன்று, திலாயா அணையையும், பொக்காரோ மின் நிலையத்தையும் பிரதமர் நேரு திறந்துவைத்தார்.
1958: தாமோதர் பள்ளத்தாக்குக் கழகத்தின் மெய்த்தன் நீர்மின் உற்பத்தி நிலையம் தொடங்கி வைக்கப்பட்டது.
1961: இயற்கை எரிவாயுமூலம் மின் உற்பத்தி செய்யும் நிலையத்தை ஆசியாவிலேயே முதன்முறையாக அஸ்ஸாமின் தூலியாஜானில் ஆயில் இந்தியா லிமிடெட் நிர்மாணித்தது.
போக்குவரத்து
1953: ஏர் இந்தியாவும் இந்தியன் ஏர்லைன்சும் உருவாக்கப்பட்டன. எட்டு உள்நாட்டு விமான நிறுவனங்கள் இணைக்கப்பட்டு இந்தியன் ஏர்லைன்ஸ் உருவாக்கப்பட்டது. இதில் 99 வகைப்பட்ட வானூர்திகள் செயல்பட்டன.
1957: விசாகப்பட்டினத்தில் உள்ள ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் தளத்தில் முதலாவது பயணியர் மற்றும் சரக்குக் கப்பல் எம்.வி. அந்தமான் கட்டப்பட்டது.
கல்வி
1947: பஞ்சாப், ராஜஸ்தான் பல்கலைக்கழகங்கள் அமைந்தன.
1948: அக்டோபர் 10 அன்று, பம்பாயில் விமானப் பொறியியல் கல்லூரி அமைந்தது. குவஹாட்டி, காஷ்மீர் பல்கலைக்கழகங்கள் உருவாயின.
1950: அஹமதாபாத்தில் குஜராத் பல்கலைக்கழகம் உருவாயிற்று.
1952: பீகார் பல்கலைக்கழகம் உருவானது.
1953: பல்கலைக்கழக மானியக் குழு அமைந்தது (University Grant Commission – UGC).
1954: செப்டம்பர் 2 அன்று, திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம் உருவானது. இது நாட்டின் 31ஆவது பல்கலைக்கழகம் ஆகும்.
கலைகளுக்கான தேசிய அகாடமியாக லலித் கலா அகாடமி உருவானது.
1955: இடைநிலைக் கல்விக்கான அகில இந்தியக் குழு உருவானது.
சர்தார் படேல் பல்கலைக் கழகம், ஜாதவ்பூர் பல்கலைக் கழகங்கள் தொடங்கி வைக்கப்பட்டன.
1958: ஜூலை 25 அன்று பம்பாயில் இந்தியத் தொழில் நுட்பக்கழகம் (ஐவு) அமைக்கப்பட்டது.
1959: ஜூலை 31 அன்று சென்னை கிண்டியில் இந்தியத் தொழில் நுட்பக்கழகம் (IIT) மேற்கு ஜெர்மனி அரசின் கூட்டுறவுடன் அமைக்கப்பட்டது.
1960: கான்பூரில் இந்தியத் தொழில் நுட்பக்கழகம் (IIT) அமைக்கப்பட்டது
1961: தில்லியில் இந்திய தொழில் நுட்பக்கழகம் (IIT) பிரிட்டிஷ் அரசின் ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டது
1963: ஜனவரி 22 அன்று பார்வையற்றோருக்கான தேசிய நூலகம் டேராடூனில் அமைக்கப்பட்டது. இந்த வகையில் அமைந்த முதல் நூலகமாகும் இது.
1964: பிலானியில் பிர்லா தொழில் நுட்ப மற்றும் அறிவியல் கழகம் பதிவு செய்யப்பட்டது. பிரதமரின் அலுவல் இல்லமான தீன்மூர்த்தி பவன் அருங்காட்சியகமாக ஜுன் 27இல் மாற்றப்பட்டது. ஒரு நூலகமும், கோளரங்கமும் இந்த வளாகத்தில் சேர்க்கப்பட்டன.
ஆராய்ச்சி மற்றும் தொழில் நுட்பம்
1947: மத்தியக் கடல் மீன்கள் ஆராய்ச்சி நிறுவனமும், மத்திய உள்நாட்டு மீன்கள் ஆராய்ச்சி நிறுவனமும் கல்கத்தாவில் அமைக்கப்பட்டன.
புதிதாக உருவாக்கப்பட்ட அணுசக்தித் துறையின் இயக்குநராக ஹோமி பாபா நியமிக்கப்பட்டார்.
1950: தேசிய வேதியியல் ஆய்வகம் பிரதமர் நேருவால் புனேயில் ஜனவரி 3 அன்று திறந்துவைக்கப்பட்டது. நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள இத்தகைய 11 ஆய்வகங்களில் இது முதலாவதாகும். 1940ஆம் ஆண்டு உருவான அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் குழுமத்தின் (Council of Scientific and Industrial Research – CSIR) ஓர் அங்கமாக இது இருந்தது. இதன் இயக்குநராக டாக்டர் எஸ்.எஸ். பட்னாகர் இருந்தார். இந்த ஆய்வகம் உலகிலேயே மிகச்சிறந்த ஆய்வகமாக உருவானது. தேசிய வேதியியல் ஆய்வகத்தின் முதன்மையான நோக்கம், தொழிலகங்களில் அறிவியல் அறிவைப் பயன்படுத்துவதாகும். பல்கலைக் கழகங்களுக்கும், மாநிலங்களுக்கும், நாட்டிலுள்ள பிற அறிவியல் நிறுவனங்களுக்கும் இடையே ஓர் இணைப்பாகச் செயல்படுவதே இதன் நோக்கமாகும்.
1952: மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் (Central Road Research Institute) புதுதில்லியில் உருவானது.
1953: மத்திய கட்டட ஆராய்ச்சிக் கழகம் ஏப்ரல் 12 அன்று ரூர்க்கியில் உருவானது.
1954: டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (Tata Institute of Fundamental Research) பிரதமர் நேரு ஜனவரி 1 அன்று அடிக்கல் நாட்டினார்.
1956: ஆசியாவிலேயே முதலாவதான அணுஉலை அப்சரா, டிராம்பேயில் ஆகஸ்ட் 4 அன்று செயல்படத் தொடங்கியது.
1957: பாபா அணு ஆராய்ச்சி மையம் டிராம்பேயில் திறக்கப்பட்டது. 26 ஜனவரியில் அணுஉலை தொடங்கி வைக்கப்பட்டது.
1960: ஆசியாவிலேயே பெரியதான கனடா – இந்தியா அணுஉலை, மின் உற்பத்தியை ஜூலை 10 அன்று தொடங்கியது. டிராம்பேயில் அணு ஆராய்ச்சிக்கு ஒரு தொடக்கம் உருவானது.
1963: தானே வழியறிந்து பறந்து செல்லும் ராக்கெட், தும்பாவில் உள்ள ஏவு மையத்தில் இருந்து நவம்பர் 21 அன்று செலுத்தப்பட்டது.
சமூக நலம்
1947: நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர் நல நிதிச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. தொழிற்சாலைகள், சுரங்கங்கள், தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பு கருதி இது இயற்றப்பட்டது.
தொழில் தகராறு சட்டம் (Industrial Dispute Act) நிறைவேறியது.
1949: தொழிற்சாலை சட்டம் 1948ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்தது. சுகாதாரம், பாதுகாப்பு, தொழிலாளர் நலம், இளம் வயதினரை வேலைக்கு அமர்த்துதல், பணி நேரம் ஆகியவை பற்றிய விரிவான வழிகாட்டுதல்கள் இதில் இடம்பெற்றிருந்தன. இதனால் 30 லட்சம் தொழிலாளர்கள் பயன்பெற்றனர்.
1956: ஆயுள் காப்பீட்டுக் கழகம் (Life Insurance Corporation – LIC) தேசியமயமாக்கப்பட்டது.
சட்டம் மற்றும் நீதி
1951: சுரங்கங்கள் சட்டம் நிறைவேறியது.
1952: தேசிய வனக் கொள்கை வெளியிடப்பட்டது.
1953: தீண்டாமைக் குற்றச் சட்டம் (Untouchability Offence Act) நிறைவேறியது.
1954: சாதி மறுப்பு , மதமறுப்புத் திருமணங்களை, சிறப்புத் திருமணச் சட்டம் 1954இல் சட்டபூர்வமாகச் செல்லுபடியாக்கியது. பரஸ்பர ஒப்புதலின் பேரில் விவாகரத்து பெறுவதையும் அறிமுகப்படுத்தியது.
1955: குடியுரிமை மசோதாவை மக்களவை நிறைவேற்றியது.
மே 5 அன்று, இந்து திருமணச் சட்டம் நிறைவேறியது. சட்டப்படி ஒருதாரம் மட்டுமே செல்லுபடியாகும். இந்து திருமணச் சட்டத்தில் அதுவரை இல்லாதிருந்த விவாகரத்து அனுமதிக்கப்பட்டது. குறைந்தபட்சத் திருமண வயது ஆண்களுக்கு 18 ஆகவும், பெண்களுக்கு 15 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.
இந்து தனிநபர் மசோதா (Hindu Code Bill) நிறைவேறியது.
1956: பெண்களைக் கடத்துவதையும் பிழைப்பிற்காக விபச்சாரம் செய்வதையும் தடைசெய்து சட்டம் இயற்றப்பட்டது.
தத்து எடுத்தல் பராமரிப்புச் சட்டம், குழந்தைகளைப் பெண்கள் தத்து எடுத்துக்கொள்வதை அனுமதித்தது. விவாகரத்து பெற்ற பெண்களுக்கு ஜீவனாம்சம் கிடைக்க வழிசெய்தது.
இந்து வாரிசு சட்டம் – 1956 (Hindu Succession Act), இந்து ஆண் வாரிசின் சொத்துக்கள் மீது அவரது மகன், மகள், விதவை மனைவி, தாயார் ஆகியோருக்கு உரிமையளிப்பதற்குப் பொறுப்பேற்றுக்கொண்டது. சொத்தில் பெண்களுக்கு வாரிசுரிமை உண்டு என்பதை இது நிறுவியது.
1959: காலிப்பணியிடங்களை அறிவிக்கை மூலம் தெரிவிக்கவேண்டும் என்பதை பணியாளர் பரிமாற்றச் சட்டம் கட்டாயமாக்கியது.
1960: அரசமைப்புச் சட்டத்தின் 8ஆவது திருத்தம், தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கும், ஆங்கிலோ இந்தியருக்கும் பாராளுமன்ற மேலவையிலும், சட்டமன்றங்களிலும் 1960 ஜனவரி 26 முதல் மேலும் 10 ஆண்டுகளுக்கு இடஒதுக்கீட்டை நீடிக்க வகை செய்தது.
1961: மகப்பேறு ஆதாயச் சட்டம், பெண்களுக்கு மகப்பேறு விடுமுறை கிடைக்க வகை செய்தது. பணி வழங்கும் அமைப்புகளையும், தேயிலை, காபி தோட்டங்கள் வைத்திருப்பவர்களையும் இந்தச் சட்டம் கட்டாயப்படுத்தியது.
வரதட்சணைத் தடுப்புச் சட்டம் அல்லது வரதட்சணைக்கு எதிரான சட்டம் நிறைவேற்றப்பட்டது.
1962: அரசமைப்புச் சட்டத்தின் 12ஆவது திருத்தம். கோவா, டாமன், டையு ஆகிய பகுதிகளை இந்தியாவுடன் இணைத்தது.
அரசமைப்புச் சட்டத்தின் 13ஆவது திருத்தத்தின்படி நாகலாந்து தனி மாநிலமாகியது.
அரசமைப்புச் சட்டத்தின் 14ஆவது திருத்தம் (30 ஆகஸ்ட்) ஹிமாசல் பிரதேசம், மணிப்பூர், திரிபுரா, கோவா, டாமன், டையு, புதுச்சேரி ஆகிய இடங்களில் சட்டப்பேரவைகளை அமைக்கப் பாராளுமன்றத்திற்கு அதிகாரம் அளித்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிகார எல்லை நவம்பர் 7 அன்று புதுச்சேரிக்கு விரிவுபடுத்தப்பட்டது.
வெளியுறவு
1949: காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பில் இந்தியா நீடித்திருக்க முடிவெடுத்தது.
இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்குமான ஐ.நா. ஆணையம் (UNCIP), ஏப்ரல் 15 அன்று, இருநாட்டு எல்லைகளில் போர் நிறுத்தத்திற்கும், இருநாடுகளும் போர்ப்படைகளைத் திரும்பப் பெறுவதற்கும் பரிந்துரைகளை அனுப்பியது.
இந்தியா, பாகிஸ்தான் நாடுகளின் ராணுவப் பிரதிநிதிகள் போர் நிறுத்தக்கோட்டைக் குறிப்பிடும் ஒப்பந்தத்தில் ஜூலை 27 அன்று கையெழுத்திட்டனர். ஐ.நா. ஆணையம் (UNCIP) காஷ்மீர் பிரச்சினையைப் பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்த்து கொள்ள வேண்டும் என்று ஆகஸ்ட் 26 யோசனை தெரிவித்தது.
இந்திய அரசாங்கம் சீனாவின் புதிய அரசாங்கத்துடன் தூதரக உறவுகளை உருவாக்கிக் கொள்ளும் முடிவைத் தெரிவித்து, நவம்பர் 30 அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டது.
1950: தென் கொரியாவிற்கு எதிரான வட கொரியாவின் ஆக்கிரமிப்பை இந்தியா கண்டித்தது.
1953: இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்கள் ஜம்மு காஷ்மீரில் பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கென ஒரு நிர்வாகியை 1954 ஏப்ரல் இறுதிக்குள் நியமிக்க ஆகஸ்ட் 20 ஒப்புக்கொண்டனர்.
செப்டம்பர் 15 அன்று, ஐக்கிய நாடுகள் சபையின் எட்டாவது அமர்வுக்கு, விஜயலக்ஷ்மி பண்டிட் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1954: இலங்கையில் வசிக்கும் இந்தியாவைப் பூர்வீகமாகக்கொண்ட மக்களைப் பற்றிய இந்திய – இலங்கை ஒப்பந்தம் அக்டோபர் 10இல் கையெழுத்தானது. புதுச்சேரி, காரைக்கால், மாஹி, ஏனாம் ஆகிய பகுதிகளில் இருந்த பிரஞ்சு குடியிருப்புகளை இந்தியாவிற்குரியதாகச் சட்டபூர்வமாக மாற்றிக்கொள்வதற்கு இந்தியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் அக்டோபர் 23 கையெழுத்தானது. இவற்றின் இணைப்பு நவம்பர் முதல் நாள் நடைமுறைக்கு வந்தது.
1956: எகிப்து பிரதமர் நாசர் பாண்டுங் (Bandung)இல் நடைபெற்ற ஆசிய ஆப்பிரிக்க நாடுகளின் மாநாட்டிற்குச் செல்லும் வழியில் இந்தியாவிற்கு வந்தார் (12 ஏப்ரல்). கோவாவில் இந்தியாவின் நலன்களைக் காப்பதற்கு எகிப்து ஒப்புக்கொண்டது. (அக்டோபர்)
பிரதமர் நேரு நல்லெண்ணப் பயணமாக ரஷ்யாவிற்கும், பிற நாடுகளுக்கும் ஜுன் 4 சென்றார். மாஸ்கோ, வார்சா, பெல்கிரேட், ரோம் ஆகிய நகரங்களுக்குச் சென்றுவிட்டு 12 ஜூலையில் நாடு திரும்பினார்.
சிந்து நதி நீரைப் பங்கிட்டுக்கொள்வது பற்றி இந்தியாவும் பாகிஸ்தானும் நவம்பர் 3 ஒப்பந்தம் செய்து கொண்டன.
பிரிட்டனும் பிரான்சும் இணைந்து சூயெஸ் கால்வாயை ஆக்கிரமித்ததை இந்தியா கண்டித்தது. அமைதி காக்கும் படைகளைக் காசா பகுதிக்கு இந்தியா செப்டம்பர் 13 அனுப்பியது.
யுகோஸ்லேவியாவின் ப்ரியோனி நகரில் இருந்தபடி நேரு, நாசர், டிட்டோ ஆகிய மூவரும் ஒரு கூட்டுப் பிரகடனத்தை ஜூலை 19 வெளியிட்டனர். அணிசேரா இயக்கத்தின் தொடக்கமாக அது அமைந்தது.
சீனப் பிரதமர் சூ யென் லாய்12 நாள் பயணமாக இந்தியாவிற்கு வந்தார்.
1957: சீன ராணுவம் திபெத்தைக் கைப்பற்றிய பிறகு, தலாய்லாமாவிற்கு இந்தியாவில் அரசியல் புகலிடம் அளிப்பது பற்றிப் பாராளுமன்றத்தில் பிரதமர் நேரு ஏப்ரல் 3 அன்று அறிக்கை அளித்தார். தலாய்லாம் விற்கும் அவரது ஒரு லட்சம் சீடர்களுக்கும் இந்தியாவில் தஞ்சம் அளிக்கப்பட்டது.
1960: சோவியத் பிரதமர் நிகிதா குருஷேவ் பிப்ரவரி 11 அன்று இந்தியா வந்தார்.
1961: இங்கிலாந்தின் மகாராணி எலிசபெத் ஜனவரி 21 அன்று இந்தியாவிற்கு வந்தார்.
1962: இந்தியாவில் தங்கள் வசம் இருந்த நிலப்பகுதிகளை இந்தியாவிற்கே திரும்பத் தந்துவிடும் ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கும் மசோதாவை, பிரான்ஸ் செனட் ஜூலை 23 அன்று ஏற்றுக்கொண்டது. பிரெஞ்ச் குடியிருப்புகள் ஆகஸ்டு 16 அன்று இந்தியாவுக்கு மாற்றித் தரப்பட்டன.
சுதந்திரம் பெற்று 72 ஆண்டுகளில் இன்று காணப்படுகிற நவீன இந்தியாவிற்கு அடித்தளம் அமைத்தவர் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு. அவரது சாதனைகளை எவரும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. அவரது பிறந்தநாளில் நேருவின் இந்தியா கண்ட சாதனைகளை நினைவு கூர்ந்து, போற்றி பாராட்டுவாம். இதுவே ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமையாக இருக்க முடியும்.