மணமகன் கரம் பிடிக்கத் தனிமையில் 80 கி.மீ. நடந்தே பயணம்..
சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை , கொரோனாவால் தடுத்து நிறுத்தி விட முடியாது என்பதை மெய்ப்பிக்கும், சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நிகழ்ந்தேறியுள்ளது.
கன்னாஜ் மாவட்டம் வைசாபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரேந்திரா. இவருக்கும், கான்பூர் தேகாத் அருகே உள்ள லட்சுமணன் திலக் என்ற ஊரை சேர்ந்த கோல்டி என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
மணமகன் வீட்டில் திருமணம் நடப்பதாக திட்டம்.
இரு வீட்டாரும் முறையான ஏற்பாடுகளை செய்யாததால், மணமகளால், குறிப்பிட்ட நேரத்தில் வைசாபூரில் உள்ள மணமகன் இல்லத்துக்குச் செல்ல முடியவில்லை.
’’வேறு ஒரு தேதியில் திருமணத்தை வைத்துக்கொள்ளலாம்’’ என இரு வீட்டாரும் பேசி முடித்தனர்.
அந்த புதிய தேதி வரைக்கும் காத்திருக்க மணமகள் கோல்டிக்கு விருப்பமில்லை.
தனது வருங்கால கணவன் வீரேந்திராவுக்கு போன் செய்த கோல்டி, ‘’ புதிய தேதியில் எனக்கு விருப்பமில்லை. உடனடியாக உங்கள் ஊருக்கு வருகிறேன். தாலியோடு காத்திருங்கள்’’ என்று தெரிவித்து விட்டு,புதன்கிழமை அதிகாலை தனது வீட்டில் இருந்து வைசாபூர் புறப்பட்டார்.
அவரது ஊரில் இருந்து மணமகன் வீடு சுமார் 80 கிலோ மீட்டர்.
அன்று மாலையே மணமகன் வீட்டை அடைந்தார்.
மணமகன் வீட்டார் பதறிப்போனார்கள்.
மாற்றப்பட்ட தேதியில் திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என்று அவர்கள் சொன்னதைக் கேட்கும் நிலையில் கோல்டி இல்லை.
வேறு வழி இல்லாமல், ஊர் கோயிலில் மணமகள் கோல்டி கழுத்தில் ,தாலி கட்டினார், வீரேந்திரா.
– ஏழுமலை வெங்கடேசன்