பென்சில்வேனியா :
கொரோனா வைரஸ் என்று இந்த வகை வைரசுக்கு 1968லேயே பெயர் வைக்கப்பட்டிருந்தாலும். 2019ம் ஆண்டு சீனாவில் மீண்டும் தலைதூக்கிய பின் உலகின் அனைத்து மூலையில் உள்ளவர்களும் கடந்த ஐந்து மாதத்திற்கும் மேலாக உச்சரிக்கும் ஒரு சொல்லாக மாறியிருக்கிறது ‘கொரோனா வைரஸ்’.
சமூக வலைதளங்களில் இந்த கொரோனா பற்றிய செய்திகள் பலவாறாக பரவிவர சில செய்திகள் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களை ஆக்கிரமிக்கின்றன.
அப்படி வந்த செய்திகளில் முதன்மையானவை :
மருத்துவமனைகளில் மனிதர்களுக்கு பதில் மேனிக்வின் (துணிக்கடை பொம்மைகள்) வைத்து கணக்கு காண்பிக்கிறார்கள்.
5ஜி டவர்களில் இருந்து வரும் கதிர்வீச்சால் பரவுகிறது
போன்ற பல்வேறு ஆதாரமற்ற செய்திகள் உலகம் முழுக்க பரவி வருகிறது.
இது போன்ற சமூக வலைதள செய்திகள் குறித்து ஆய்வு நடத்திய அமெரிக்காவைச் சேர்ந்த கார்னிகி மெலன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்
கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்து சமூக ஊடகங்களில் செய்திகளைப் பரப்பும் ட்விட்டர் கணக்குகளில் கிட்டத்தட்ட பாதி ‘போட்’ எனப்படும் தானியங்கி கணக்குகளாக இருக்கலாம் என்று தெரிவித்தனர்.
இந்த ஆராய்ச்சியாளர்கள் ஜனவரி முதல் 20 கோடிக்கும் அதிகமான கொரோனா வைரஸைப் பற்றிய ட்வீட்-களை ஆராய்ந்தனர், அவற்றில் 45 சதவீத ட்வீட்கள் மனிதர்களை விட கணினிமயமாக்கப்பட்ட ரோபோக்களைப் போலவே செயல்படும் கணக்குகளால் அனுப்பப்பட்டதைக் கண்டறிந்தனர்.
இந்த ‘போட்’ கணக்குகளை செயல்படுத்தியது தனிநபர்களா அல்லது குழுக்களா என்பதை தற்போது உறுதியாக கூறமுடியாது, ஆனால் இந்த ட்வீட்டுகள் அமெரிக்க மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.
“இது ஒரு விஷம பிரச்சாரம் போல் எங்களுக்குத் தெரிகிறது, அது நிச்சயமாக ரஷ்ய மற்றும் சீனாவின் தூண்டுதல்களுடன் பொருந்துகிறது, ஆனால் அதை உறுதிப்படுத்த மேலும் சில ஆராய்ச்சிகள் தேவைப்படுகிறது ” என்று கார்னிகி மெலன் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் பேராசிரியர் கேத்லீன் கார்லி கூறினார்.
COVID-19 பற்றிய 100 க்கும் மேற்பட்ட தவறான தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர், அவை போட்கள் மூலம் செயல்படும் ட்விட்டர் கணக்குகளால் ரீ-ட்வீட் செய்யப்பட்டுவருகின்றன.
“முந்தைய இயற்கை பேரழிவுகள், நெருக்கடிகள் மற்றும் தேர்தல் நேரங்களில் நாங்கள் பார்த்ததை விட இரண்டு மடங்கு அதிகமான ‘போட்’ செயல்பாட்டை இப்போது நாங்கள் காண்கிறோம்” என்று கார்லி கூறினார்.
ட்விட்டர் செய்தித் தொடர்பாளர், கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தின் இந்த ஆய்வுகள் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார், ஆனால் கொரோனா வைரஸைப் பற்றிய தவறான அல்லது தீங்கு விளைவிக்கும் தகவல்களைக் கொண்ட ஆயிரக்கணக்கான ட்வீட்களை நீக்கியுள்ளதாக, நிறுவனம் கூறுகிறது.
தீங்கிழைக்கும் அல்லது தவறான எண்ணம் கொண்ட COVID-19 பற்றிய விவாதங்களை பரப்புவதை நோக்கமாக கொண்டு செயல்பட்ட 15 லட்சம் கணக்குகளை, அதன் தானியங்கி அமைப்புகள் நீக்கியதாக ட்விட்டர் நிறுவனம் கூறுகிறது.
கொரோனா வைரஸின் தாக்கத்தை பயன்படுத்தி நிலைமையை மோசமாக்குவதற்காக மேற்கத்திய நாடுகளில் பீதி மற்றும் அவநம்பிக்கையை உருவாக்க ஒரு பரவலான தவறான பிரச்சாரத்தை ரஷ்ய ஊடகங்கள் மேற்கொண்டதாக ராய்ட்டர்ஸ் சமீபத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.
ட்விட்டரில் போட் கணக்குகளை எதிர்கொள்வது ஒரு எளிய பணி அல்ல என்று கார்னிகி மெலன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் கார்லி கூறினார். நீக்கப்பட்ட கணக்குகள் மீண்டும் தோன்றக்கூடும் மற்றும் தவறான தகவல் நெட்வொர்க்குகள் முற்றிலும் அதிநவீன முறையில் தோன்றக்கூடும் இதை வேரறுப்பது கடினம் என்றும் கூறினார்.
“யாராவது உங்கள் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று தோன்றினாலும், உங்களுக்கு அவர்களை தனிப்பட்ட முறையில் தெரியாவிட்டால், அவர்களைப் பற்றிய அதிகாரபூர்வமான அல்லது நம்பகமான தகவல்களை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்” என்று கார்லி கூறினார்.
“மிகவும் விழிப்புடன் இருங்கள்.”