சென்னை: குடும்ப வன்முறை குறித்து வரும் புகார்களின் மீது நடவடிக்கை எடுக்க, ‘தாய் வீடு’ என்ற பெயரில் வாட்ஸ்ஆப் குழு துவக்கப்பட்டுள்ளது என்று உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது தமிழக அரசு.
ஊரடங்கு காலத்தில், அதிகரிக்கும் குடும்ப வன்முறையை தடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இம்மனுவுக்கு, சமூக நலத்துறை செயலர் மதுமதி தாக்கல் செய்த கூடுதல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; குடும்ப வன்முறை புகார்களுக்கு தீர்வுகாணும் அதிகாரிகளின் தொடர்பு எண் விபரங்கள், ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.
சென்னை, மதுரை, சேலம், திருநெல்வேலியில் உள்ள மகளிர் காவல் நிலையங்களுடன் இணைந்த, மகளிர் சிறப்பு பிரிவு விபரங்களும் வழங்கப்பட்டுள்ளன. கிராமங்களில், குடும்ப வன்முறைக்கு ஆளாகும் பெண்கள் அங்கன்வாடி ஊழியர்களைத் தொடர்பு கொள்ளலாம். அவர்கள், மாவட்ட சமூக நல அதிகாரிகளிடம் தகவல் தெரிவிப்பர்.
மாவட்ட சமூக நல அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் தொடர்பு எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்டங்களிலிருந்து, சமூக நலத்துறை, தினசரி அறிக்கைப் பெறுகிறது.
ஊரடங்கு நேரத்தில், 616 புகார்கள் பெறப்பட்டன. குடும்ப வன்முறை புகார்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க, ‘தாய் வீடு’ என்ற வாட்ஸ் ஆப் குழு துவங்கப்பட்டுள்ளது.
இதில், சமூக நலத்துறை செயலர், ஆணையர், மாவட்ட சமூக நல அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். குடும்ப வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்கு அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பான விசாரணையை வரும் ஜூன் மாதம் 5ம் தேதிக்கு தள்ளி வைத்தனர் நீதிபதிகள்.