திருட்டை விட்டுவிட்டு காய்கறி வியாபாரம்.. கொரோனாவால் நடந்த மனமாற்றங்கள்..
ஒரு தொழில் மோசமாகும்போது வயிற்றுப்பிழைப்புக்காக வேறு தொழிலைத் தேர்ந்தெடுப்பது வழக்கம் தானே. செயின் பறிப்பு, மொபைல் திருட்டு என்று இருந்த சிலர் இந்த ஊரடங்கினால் தொழில் செய்ய முடியாத சூழலில் காய்கறிகள், பால் பாக்கெட் என்று மொத்தமாகத் திருடி விற்பதை புதிய தொழிலாக மாற்றிக்கொண்டுள்ளனர்.
தலைமைக்காவலர் சரவணகுமார் கோட்டூர்புரம் ஏரியாவில் ட்ரைசைக்கிளில் காய்கறி விற்றுத் திரிந்த ஒருவன் மேல் சந்தேகப்பட்டு விரட்டிப்பிடித்து காவல்நிலையம் அழைத்து வந்து விசாரித்தபோது தான் இந்த புதிய தொழில் பற்றித் தெரியவந்துள்ளது.
“குதிரை சிவா” என்பவன் ஒரு தேர்ந்த மொபைல் திருடனாம். இவன் பீச்சில் குதிரை சவாரி மூலம் ஜாலி ரைட் நடத்தி சம்பாதித்து வந்த நிலையில் இரண்டு திருநங்கைகளைத் திருமணம் செய்துகொண்டுள்ளான். அதன் பிறகு தினசரி குடும்பம் நடத்துவதில் பணப் பற்றாக்குறையினால் பிரச்னை ஏற்பட, தொழிலை மாற்றி பீச்சில் காலை வேளையில் வாக்கிங் வரும் வயதானவர்களாகத் தேர்ந்தெடுத்து மொபைல் போனை திருடி விற்பது, செயின் பறிப்பு என்று வாழ்ந்து வந்துள்ளான்.
இந்நிலையில் ஊரடங்கு வந்துவிட வருமானம் இன்றி தவித்தவனுக்கு ஒருநாள் புதுப்பேட்டை ஏரியாவில் ஒரு கடையின் வெளியே அடுக்கி வைக்கப்பட்டிருந்த காய்கறி கூடைகள், பால் பாக்கெட்கள் போன்றவை புதிய யோசனையைத் தர, ஜெர்கின், ஹெல்மெட் சகிதமாக அடையாளங்களை மறைத்துக்கொண்டு தனது நண்பனுடன் பைக்கில் வந்து இந்த காய்கறிகளைத் திருடிச்சென்று, ட்ரை சைக்கிளில் கோட்டூர்புரம், தெருத்தெருவாக விற்பதை வழக்கமாக்கிக்கொண்டான். இடையில் கோயம்பேடு சந்தை மூடப்பட்ட நிலையில் இவன் காய்கறி விற்கும் ஏரியாவிலுள்ள சில கடைகளுக்கு மொத்தமாகக் காய்கறி மற்றும் பால் பாக்கெட்களை வினியோகிக்கும் ஏஜண்ட்டாகவும் மாறிவிட்டான். இதன் மூலம் தினசரி குறைந்தது ரூ. 1000/- வரை வருமானம் கிடைக்கத் தொழில் அமோகமாகப் போய்க்கொண்டிருந்த நிலையில் தான் இப்போது மாட்டிக்கொண்டான்.
இதே போல அம்பத்தூர் ஏரியாவில் பால் பாக்கெட்களை மட்டுமே திருடும் ஒருவனும் சிசிடிவி உதவியால் சிக்கியுள்ளான்.
ஆனால் காவல்துறையினர், “அரசு பல கட்டுப்பாடுகளைத் தளர்த்திய நிலையில் இனி செயின் பறிப்பு , மொபைல் திருட்டு போன்றவை மீண்டும் தலைதூக்கும் வாய்ப்புள்ளது. எனவே இனி பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்” என்கின்றனர்.
– லட்சுமி பிரியா