நடுவழியில் பறந்த உயிர்.. சைக்கிள் பயணத்தால் கொடுமை…

பீகாரைச் சேர்ந்த பிஸ்வாஸ் மற்ற எல்லோரையும் போலவே வேலை ஏதுமின்றி கடந்த இரண்டு மாதங்களாகத் தவித்து வந்துள்ளார்.  உடனிருப்போர் சமைப்பதில் இவரும் பசியாறி வந்துள்ளார்.  அரசின் ஏற்பாட்டின்படி அனைவரும் பேருந்து, ரயில் என்று கிளம்ப பிஸ்வாஸ் மற்றும் அவர் உடன் பணியாளர்களிடம் அதற்கான பணம் இல்லாததால் சொந்த ஊருக்குப் பயணிக்க முடியாமல் தவித்து வந்துள்ளனர்.

இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட வீடியோக்களை பார்த்த பிஸ்வாஸ் குழுவினரும் பீகாரிலுள்ள தங்கள் சொந்த ஊருக்குச் சைக்கிளிலேயே சென்றுவிட முடிவுசெய்து தங்களை அழைத்து வந்த ஏஜெண்டிடம் கெஞ்சிக் கூத்தாடி அனுமதி வாங்கிக்கொண்டு வேளச்சேரியிலிருந்து கிளம்பியுள்ளனர்.

ஆனால் அங்கிருந்து 60 கிலோமீட்டரில் உள்ள ஆந்திரா எல்லையிலுள்ள கவரப்பேட்டை என்னுமிடத்தில் நேற்று பிஸ்வாஸ் மட்டும் சாலையோரமாகச் சடலமாகக் கிடந்துள்ளார்.  அவ்வழியாகச் சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இவருடன் சேர்ந்து கிளம்பிய மற்றவர்கள் என்ன ஆனார்கள், இவரை ஏன் அவர்கள் கண்டுகொள்ளாமல் விட்டுச்சென்றனர் என்பது பற்றிய விபரங்கள் தெரியாத நிலையில், “பசி, தாகத்தினால் இவர் மற்றவர்களிடமிருந்து பின்தங்கி மயங்கி விழுந்து இறந்திருக்கலாம்.  இவர் இறந்தது தெரியாமல் சென்றுவிட்டவர்கள், இவர் பின்னால் வருவார் என்ற முடிவில் பயணத்தைத் தொடர்ந்திருக்கலாம்.  எனினும் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது குறித்து விசாரித்து வருகிறோம்” என்று கூறியுள்ளனர் காவல்துறையினர்.  சம்பவ இடத்திலிருந்த இவரது சைக்கிள் காணாமல் போயுள்ளது என்பதும் ஓர் கூடுதல் தகவல்

கொரோனாவால் இறப்பவர்கள் ஒருபுறமென்றால் 38 வயதான ராம் பிஸ்வாஸ் போல உண்ண உணவின்றி இறப்போரின் நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளது.

– லெட்சுமி பிரியா