பெங்களூரு

இன்று மூன்றாம் கட்ட ஊரடங்கு முடிய உள்ள நேரத்தில் கர்நாடக அரசு மேலும் இரு நாட்கள் நீட்டித்துள்ளது.

கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த முதல் கட்டமாக மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை நாடெங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.   அதன் பின்னர் இரண்டாம் கட்ட ஊரடங்கு மே 3 வரையும், மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17 வரையும் நீட்டிக்கப்பட்டது.  இதையொட்டி பல மாநிலங்கள் ஊரடங்கு விதிகளில் தளர்வுடன் ஊரடங்கை நீட்டித்துள்ளன.   தமிழகத்தில் மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் பிரதமர் மோடியின் காணொளிக் காட்சி உரையாடலின் போது, ​​பல்வேறு மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

கலந்துரையாடலில் கலந்துகொண்ட கர்நாடகா முதல்வர் ​​எடியூரப்பா பேசுகையில், ”மாவட்ட வாரியான வண்ணக் குறியீட்டை நீக்க வேண்டும். அதற்குப் பதிலாக தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்த கட்டுப்பாட்டு மண்டலங்களைக் கடுமையாகச் சுற்றி வளைக்க வேண்டும். தனியார் நிறுவனங்களில் அனைத்துப் பொருளாதார நடவடிக்கைகளையும் மீண்டும் தொடங்க வேண்டும்.

அதே நேரத்தில் மால்கள், திரை அரங்குகள், உணவு விடுதிகள் மற்றும் மையக் கட்டுப்பாட்டு ஏ.சி. பொருத்தப்பட்ட நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடுகளைத் தொடரவேண்டும். கரோனா பாதித்த இடங்களைச் சுற்றி 50 முதல் 100 மீட்டர் வரை கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவித்துவிட்டு மீதியுள்ள இடங்களில் பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட வணிக நடவடிக்கைகள் அனுமதிக்கப்பட வேண்டும்” என்று பரிந்துரைத்தார்.

ஏற்கனவே கர்நாடகத்தில்  தற்போதுள்ள மூன்றாவது கட்ட ஊரடங்கு முடிவுக்கு வந்ததும், மே 17 க்குப் பிறகு பல விஷயங்களுக்குத் தளர்வு அறிவிக்க வாய்ப்புள்ளதாக நம்பிக்கை தெரிவித்த முதல்வர் எடியூரப்பா, அதற்கு முன் மத்திய அரசின் வழிகாட்டுதல்களுக்காக மாநில அரசு காத்திருக்கும் எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று கர்நாடக அரசின் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மே 19 நள்ளிரவு தற்போதுள்ள மூன்றாம் கட்ட ஊரடங்கு தொடரும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.