சட்டீஸ்கர்:
சட்டீஸ்கரில் ஆளும் காங்கிரஸ் அரசு, மற்ற மாநிலங்களில் இருந்து, நடந்தே வந்தடைந்த ஏழைகளுக்கு ஷூ-க்கள் மற்றும் சிலிப்பர்களை வழங்கியுள்ளது.
பொதுமுடக்கம் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், அவர்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப வசதியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்துதவிக்கும் தொழிலாளர்கள் ரயில்களில் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தினார்.
அவரின் இந்தக் கோரிக்கையை ரயில்வே அமைச்சகம் ஏற்கவில்லை. இதையடுத்து, காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களிலிருந்து சிறப்பு ரயில்களில் பயணம் மேற்கொள்ளும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான பயணச் செலவை அந்தந்த மாநில அரசுகளே ஏற்றுக்கொள்ளும் என்று சோனியா காந்தி அறிவித்தார்.
அதன்படி பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநில அரசுகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக இதுவரை இயக்கப்பட்டுள்ள சுமார் 100 சிறப்பு ரயில்களுக்கான பயணக் கட்டணத்தை செலுத்தியுள்ளன.
பஞ்சாப் அரசு, தமது மாநிலத்தில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப வசதியாக, 60 சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தது.
தொழிலாளர்களின் பயணக் கட்டணத்தை தாமே செலுத்துவதற்காக 35 கோடி ரூபாயையும் ஒதுக்கியுள்ளது. தினமும் 13 ரயில்கள் வீதம் அங்கிருந்து இயக்கப்பட்டு வருகின்றன. சிறப்பு ரயில்களுக்கான பயணக் கட்டணமாக இதுநாள்வரை 6 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது என்று அந்த மாநில அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான, ராகுல் காந்தி டெல்லியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வேதனையையும் துன்பத்தையும் நேரில் சென்று கேட்டறிந்தார். இதே போன்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும், தன் பங்குக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் போக்குவரத்துக்கு 1000 பஸ்களை அனுப்ப தயாராக இருப்பதாக பிரியங்கா காந்தி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சட்டீஸ்கரில் ஆளும் காங்கிரஸ் அரசு, மற்ற மாநிலங்களில் இருந்து, நடந்தே வந்தடைந்த ஏழைகளுக்கு ஷூஸ் மற்றும் சிலிப்பர்களை வழங்கி உதவியுள்ளது.