தொழிலாளர்கள் பசி.. நள்ளிரவில் சமைத்த பெண் எஸ்.பி…
ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருப்பவர், ராஜகுமாரி.
பெண் ஐ.பி.எஸ்.அலுவலரான அவரது செல்போனில், தொடர்பு கொண்டு பேசிய ஒரு பெண், தானும், மேலும் 10 பெண்களும் 3 நாள் பட்டினியாக இருப்பதாகக் கதறியுள்ளார்.
அப்போது நேரம் இரவு 12 மணி.
தங்களுக்குச் சாப்பாடு வேண்டும் என்று கூறிய அந்த பெண், தங்கள் சோகக்கதையை எஸ்.பி.யிடம் பகிர்ந்து கொண்டார்.
யார் அவர்கள்?
என்ன கதை?
சொந்த ஊர் விஜயநகரம். பிழைப்புக்காக நெல்லூர் மாவட்டம் சூளூர்பேட்டை சென்ற 11 பேரும் ஊரடங்கு காரணமாகச் சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
3 நாள் பயணத்தில் விஜயநகரத்தை எட்டிவிட்டனர். ஆனால் பசி.
3 நாட்களும் சாப்பிடவில்லை.
நேரமோ நள்ளிரவு.
அப்போது தான் எஸ்.பி.ராஜகுமாரிக்கு போன் செய்து அந்த பெண் தங்கள் கதையைச் சொல்ல-
தனது உதவியாளர்களிடம் உணவு ஏதும் உள்ளதா? என்று கேட்டுள்ளார் எஸ்.பி.
அவர்கள் சில ’’பிரெட்’’ பாக்கெட்டுகளை கொடுத்துள்ளனர்.
3 நாள் பட்டினி கிடந்தவர்களுக்கு ’’பிரெட்’’ போதாது என்பதை உணர்ந்த எஸ்,பி.ராஜகுமாரி, தனது உதவியாளர் ஒருவர் துணையுடன் எலுமிச்சை சாதம் தயாரித்துள்ளார்.
இந்த இடைப்பட்ட நேரத்தில் அங்குள்ள பள்ளியில் 11 பெண்களையும் தங்க ஏற்பாடு செய்திருந்தார்.
நள்ளிரவு தாண்டி ,ஒரு மணிக்கு உணவு தயாரித்து முடித்து, தானே நேரில் கொண்டு சென்று 11 பெண் தொழிலாளர்களுக்கும் வழங்கியுள்ளார், எஸ்.பி.
அவரது மனிதாபிமானத்தில் 11 பேரும் உருகி கண்ணீர் விட்டு,அழுதுள்ளனர்.
எஸ்.பி.யின் செல்போன் எண் எப்படி அந்த பெண்ணுக்குத் தெரியும்?
அவரது உறவினர் ஒருவர் செய்தியாளராக பணியாற்றி வருகிறார்.
ஐ.பி.எஸ்.அதிகாரி ராஜகுமாரியின் நல்ல குணத்தையும், மனிதாபிமானத்தையும் உறவுப் பெண்ணிடம் எடுத்துச் சொன்ன செய்தியாளர், ராஜகுமாரியின் செல்போன் எண்ணையும் கொடுத்துள்ளார்.
உணவு அளித்த எஸ்.பி., 11 பெண்களும் அந்த பள்ளியில் 14 நாள் தங்களைத் தனிமைப் படுத்திக்கொள்ள ஏற்பாடு செய்து விட்டே வீடு திரும்பியுள்ளார்.
– ஏழுமலை வெங்கடேசன்