புது டெல்லி:
நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயிலை இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பரவாமல் தடுப்பதற்காகப் பிரதமர் மோடி, கடந்த மார்ச் 24ம் தேதியன்று நள்ளிரவு முதல் பொது ஊரடங்கை அறிவித்தார். திடீரென ஊரடங்கு அறிவித்ததால், பஸ், ரயில் உள்ளிட்ட எந்த போக்குவரத்து வசதியும் இல்லாமல் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அவதியடைந்தனர். வேலையும் இழந்து சாப்பிடவும் வழியில்லாமல் லட்சக்கணக்கான தொழிலாளர்கள், 1000 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடக்கத் தொடங்கினர்.
இதனால், மத்திய அரசின் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்புவதற்குச் சிறப்பு ரயில்களை விட மத்திய அரசு முடிவெடுத்தது. ஆனால், ஒரே நாளில் பல ஆயிரம் பேர் தங்கள் மாநிலங்களுக்குத் திரும்பினால், அவர்கள் அனைவரையும் கொரோனா சோதனைக்கு உட்படுத்தி, தனிமையில் வைத்து சோறு போடுவது கஷ்டம் என்று பல மாநில அரசுகள், அந்த ரயில்களை மொத்தமாக அனுமதிக்க மறுத்து வருகின்றன.
இந்நிலையில், நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயிலை இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயிலை இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் செல்ல வேண்டிய இடங்களின் பட்டியலை தயாரித்து மாவட்ட ஆட்சியர்கள் அளித்தால், அநத மாவட்டங்களில் இருந்து ரயில் இயக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக குறைந்த காலத்தில் 364 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டிருப்பதாகவும், இதன்மூலம் 4,50,000 பேர் அவர்களது சொந்த ஊர்களுக்கு சென்றிருப்பதாகவும் அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.