சென்னை

நாளை வங்கக் கடலில் ஆம்பன் புயல் உருவாகி 95 கிமீ வேகத்தில் சூறாவளி வீசும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்போது தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் காரணமாக கடும் வெயில் மக்களை வாட்டி வருகிறது.  இந்நிலையில் வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாற வாய்ப்புள்ளது.  இந்தப் புயலுக்கு ஆம்பன் எனப் பெயரிடப்பட்டுள்ளது.  ஆம்பன் என்னும் பெய்ர் தாய்லாந்து நாடு  பரிந்துரை செய்துள்ள பெயர் ஆகும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் வெளியிட்ட அறிவிப்பில், “வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். ஏற்கனவே தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதியில், உருவான, காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதே இடத்தில் நீடிக்கிறது. இன்று மாலை அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை புயலாக வலுவடையலாம்.

வரும் 17ம் தேதி வரை வடமேற்கு திசையில் நகரும் இந்த புயல், 18ம் தேதி, வடகிழக்கு திசையில் நகரும். அப்போது 75 முதல் 85 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று  வீசக்கூடும்.  இந்த சூறாவளி ஒரு சில இடங்களில், 95 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மேற்கு வங்கக் கடல் மற்றும் வங்கக் கடல் பகுதி, குமரிக்கடல், கச்சத்தீவு, தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீனவர்கள் எச்சரிக்கப்படுகின்றனர்,
இந்த காற்றழுத்த பகுதி இன்று மாலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நாளை புயலாக மாறினாலும், இது தமிழகத்தில் கரையைக் கடக்காது. இது, வடக்கு மற்றும் வட கிழக்கு திசையை நோக்கிப் பயணிப்பதால் ஒடிசா அல்லது வங்கதேசத்தில் கரையைக் கடக்கக் கூடும்.  குறிப்பாக வங்க தேசத்தில் கரையைக் கடந்தால், அதனால் தமிழகத்திற்கு மழை இல்லாமல் வெப்ப சலனம் காரணமாக வெயில் மேலும் அதிகரிக்கும்.
இந்தப் புயல், வட கிழக்காகச் செல்லாமல், வடக்கு நோக்கி நகர்ந்தால் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதே வேளையில் அரபிக் கடலில் உள்ள காற்றின் ஈரப்பதத்தை இந்த புயல் இழுக்கும் காரணத்தால், கேரளா மற்றும் கர்நாடகாவில் கடலோரப் பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. அத்துடன் ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது.  மேலும் அந்தமானிலும் மழை பெய்யும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.