திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் விதிமுறை மீறலில் ஈடுபட்டவர்களிடம் நகராட்சி ஆணையர் நடந்து கொண்ட கட்டுமிராண்டித்தனமான செயலுக்கு சமூக ஆர்வலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தேவஸ்தானம், செட்டியப்பனூர் ராமநாயக்க பேட்டை, கிரிசமுத்திரம், ஆகிய கட்டுப்படுத்தப்பட்ட 4 பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் தேனீர் கடைகள், மளிகை உள்ளிட்ட கடைகள் திறக்க நேற்று முதல் அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் வட்டாட்சியர் சிவ பிரகாசம் மற்றும் நகராட்சி ஆணையாளர் சிசில் தாமஸ் ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறையினர் மற்றும் நகராட்சி பணியாளர்கள் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இயங்கி வந்த ஒரு சலூன் கடை உட்பட 4 கடைகளை வருவாய்த்துறையினர் பூட்டினர்.
இந்நிலையில், வாணியம்பாடி நகராட்சியில் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனையில் சாலையோர வியாபாரிகள் உள்ளிட்ட சிலர் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ், வியாபாரிகள் விற்பனைக்காக வைத்திருந்த பொருட்களை சாலை தூக்கி எறிந்தும், அவர்களது வண்டிகளை தள்ளி விட்டு கவிழ்த்தும், பொருட்களை காலால் எட்டி உதைத்தும் ஒரு அதிகாரி போன்று நடந்து கொள்ளாமல், ரவுடி போன்று அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்த வீடியோ சமூக வலை தளங்களில் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
ஆணையரின் இந்த செயல் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆணையர் தாமஸின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள், விதிமுறை மீறல் நடந்திருந்தாலும், இப்படி நடந்து கொள்வது ஒரு ஆணையருக்கு இது அழகா? என்று கேள்வி எழுபினர்.
மேலும், சாலையோர வியாபாரிகளிடம் அத்துமீறலில் ஈடுபட்ட வாணியம்பாடி நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.