பாட்னா

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் தம்முடன் கொரோனா தனிமை மையங்களுக்கு வரலாம் என அழைத்துள்ளார்.

நாடெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் பீகார் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  பீகார் மாநிலத்தில் இதுவரை 539 பேர் பாதிக்கப்பட்டு 4 மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 158 பேர் குணமடைந்து தற்போது 377 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   பீகார் அரசு இந்த விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகளுடன் அரசின் கூட்டணிக் கட்சியான பாஜகவும் குறை கூறி வருகிறது.

பீகார் மாநில எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், “பீகார் அரசு கொரோனா தாக்குதல் குறித்துச் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை எனப் புகார்கள் எழுந்துள்ளன.  முதல்வர் நிதிஷ்குமார் மிகவும் அனுபவம் மிக்க ஆட்சியாளர் ஆவார்.  அவர் பலமுறை பல பயணங்களை மாநிலத்தில் செய்துள்ளார்.

தற்போது கொரோனா நடவடிக்கைகள் மற்றும் தனிமை மையம் குறித்த பல புகார்கள் எழுந்துள்ளன.  அவற்றையொட்டி முதல்வர் நிதிஷ்குமார் அந்த தனிமை மையங்களுக்கு பயணம் செய்து நிலைமையைக் குறித்து ஆய்வு செய்யலாம்.” எனத் தெரிவித்தார்.  முதல்வர் நிதிஷ்குமார் பாஜகவின் குறைகளுக்குப் பதில் அளிக்கவில்லை எனினும் தேஜஸ்வி யாதவ கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ளார்.

முதல்வர் நிதிஷ்குமார் அளித்த பதிலில்,, “நான் பயணம் செய்வதில் புகழ் பெற்றவன் தான்.  ஆனால் தற்போது கொரோனா கட்டுப்பாடு விதிகள் காரணமாகப் பயணம் செய்யவில்லை.   விதிகளை தளர்த்தும் போது நான் பயணம் செய்ய உள்ளேன்.  அப்போது தேஜஸ்வி யாதவும் என்னுடன் கொரோனா தனிமை மயங்களுக்கு உடன் வரலாம்” என அழைப்பு விடுத்துள்ளார்.