எர்ணாகுளம்:

பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களிடம் எர்ணாகுளத்தில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல 32 லட்சம் ரூபாய் ரயில் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

மே 1 முதல் கடந்த மூன்று நாட்களில் மட்டும் எர்ணாகுளத்தில் இருந்து சுமார் 5 ஆயிரத்து 500 புலம்பெயர் தொழிலாளர்கள் பீகார் மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள் மூலம் சென்றுள்ளனர்.

ஒரு டிக்கெட் 530 ரூபாய் என்ற அளவில் ஒவ்வொரு தொழிலாளர்களிடம் இருந்தும் ரயில் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து எர்ணாகுளம் மாவட்ட நிர்வாக அதிகாரி கூறுகையில், இந்த தொகை முன்பதிவு செய்யாத டிக்கெட் கட்டணத்துக்குதான் ஈடாகும். சிறப்பு ரயில்களில் பயணம் செய்யும் புலம்பெயர் தொழிலாளர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட தொகை இந்திய ரயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது என்று தெரிவித்துள்ளார். மாநில அரசு தரப்பில் எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.

மேலும் புலம்பெயர் தொழிலாளர்களுக்குத் தேவையான உணவு, மருந்து, குடிநீர் அனைத்தையும் மாநில அரசு வழங்குகிறது என்றும் புலம்பெயர் தொழிலாளர்களின் போக்குவரத்துப் பணிகளை கண்காணிக்கும் கொச்சி துறைமுக துணை ஆட்சியர் ஸ்னேஹில் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து புலம்பெயர் தொழிலாளர்கள் தெரிவிக்கையில், நாங்கள் கடந்த சில மாதங்களாக பணிக்குச் செல்லவில்லை. ஆனால், இதைவிட்டால் எங்களுக்கு வேறு வழியில்லை. சாதாரணமாக அலுவா – புவனேஸ்வர் இடையே செல்ல 445 ரூபாய் தான் கட்டணம். தற்போது 530 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. கஷ்டப்பட்டு இந்த கட்டணத்தை கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று வருத்துடன் தெரிவித்துள்ளனர்.