வெளிநாட்டு இந்தியர்கள்.. மத்திய அரசு விதிக்கும் நிபந்தனை..
கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் பயணிகள் விமான போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது. வைரஸ் காரணமாக மிரண்டுபோயுள்ள பெரும்பாலான நாடுகள், வெளிநாட்டிலிருந்து பயணிகள் வருகை என்றாலே அலறுகின்றன. தாயகம் திரும்பும் சொந்த குடிமகனாக இருந்தாலும் இதே நிலைதான்.
இன்னொருபக்கம், நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்படும் நாடுகள், வெளிநாட்டினரை வெளியேற்றுவதில் குறியாக இருக்கின்றன. இதனால் பல்வேறு நாடுகளில் பல்வேறு நாட்டினர் மாட்டிக்கொண்டு செய்வதறியாது தவிக்கின்றனர்
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்குச் சென்றவர்களும் கடந்த பல வாரங்களாக அங்கிருந்து வரமுடியாமல் தத்தளிக்கின்றனர். இந்நிலையில் அவர்களைப் பத்திரமாக இந்தியா கொண்டுவர மத்திய அரசு தற்போது தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
வரும் ஏழாம் தேதிமுதல் வெளிநாட்டிலிருந்து இந்தியர்கள் படிப்படியாக விமானங்களிலும் கடற்படை கப்பல்களிலும் மீட்டு வரப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி இல்லை வெளிநாட்டில் மருத்துவ சான்றிதழ் பெற்றவர்கள் மட்டுமே இந்தியா வர அனுமதிக்கப்படுவார்கள். அப்படியே அவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டாலும், விதிமுறைப்படி இங்கு மருத்துவமனைகள் அல்லது கல்வி நிறுவனங்களில் தயார் செய்யப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஏற்பாட்டுக்கு உட்படுத்தப்படுவார்கள்.
குறிப்பிட்ட காலம் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகி, நோய்த் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பிறகே அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள்.
இந்த காலங்களில், அவர்களுக்கு ஆகும் அனைத்து செலவுகளையும் அவர்களே ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.
– வி.பி. லதா