துபாய்
உலகின் மிகப் பெரிய மாலான தி துபாய் மால் கொரோனா அச்சத்தால் மிகுந்த கட்டுப்பாடுகளுடன் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப் பெரிய ஷாப்பிங் மால அமீரக தலைநகர் துபாயில் அமைந்துள்ளது. உலகின் செல்வச் செழிப்பு மிகுந்த துபாயில் உலகின் மிக உயர்ந்த கட்டிடத்தில் அமைந்துள்ள இந்த மாலில் ஒரு ஏரி உருவாக்கப்பட்டு அதை சுற்றிலும் 1300 பிரம்மாண்டமான கடைகள் கட்டப்பட்டுள்ளன. வருடத்துக்கு சுமார் 80000 பேர் வரும் இந்த மால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டது.
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தி துபாய் மால் என பெயரிடப்பட்டுள்ள இந்த ஷாப்பிங் மால் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்த மாலில் தற்போது கொரோனா அச்சுறுத்தலால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் வரும் வாகனங்களை நிறுத்த வழி சொல்லும் ஊழியர் உள்ளிட அனைவருமே முகக் கவசத்துடன் தென்படுகின்றனர்.
வாகனத்தை நிறுத்தி விட்டு கீழே இறங்கியதும் மற்றொரு முகக்கவசம் அணிந்த ஊழியர் வந்தவர்களை தெர்மல் கன் கொண்டு கண்களைச் சோதித்த பிறகே மேலே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர் அதன் பிறகு அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கை சுத்திகரிப்பான் அளித்து கை துடைத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
தற்போது மாலுக்குள் 3 முதல் 12 வயதுடைய குழந்தைகளும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த மாலில் உள்ள திரையரங்குகள், நீர் விளையாட்டு பிரிவு ஆகியவை மூடப்பட்டுள்ளன. முகக் கவசம் அணிவோர் மட்டுமே மாலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். சமூக இடைவெளியை பின்பற்ற வசதியாக மொத்த கொள்ளளவில் 30% பேருக்கு மட்டுமே அனுமதி உண்டு.