டில்லி
சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் சேர நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதற்குச் சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரி நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த உத்தரவு சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவன உரிமைகளைப் பறிப்பதால் நீட் தேர்வில் இருந்து தங்களுக்கு விலக்கு அளிக்கக் கோரி வேலூர் சி எம் சி உள்ளிட்ட கல்லூரி நிர்வாகங்கள் வழக்கு தொடர்ந்தனர்.
உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. நேற்று இந்த வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பில், ”நீட் தேர்வு நாட்டின் நலனை முன்னிட்டு மருத்துவக் கல்வியைச் சீராக்கும் நோக்கில் நடத்தப்படுகிறது.
எனவே சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியாது.
நீட் தேர்வு நாட்டின் நலனை முன்னிட்டு கொண்டு வரப்பட்டுள்ளதால் தேர்வுக்குப் பெரும்பான்மை, சிறுபான்மை எனப் பார்க்க முடியாது. அதைப் போலவே சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் தனியாகத் தேர்வு நடத்தும் பரிந்துரையையும் ஏற்க முடியாது.
நீட் தேர்வுச் சட்டம் அரசு உதவி பெறாத மற்றும் அரசு உதவி பெறும் சிறுபான்மையின கல்வி நிறுவனங்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் இல்லை. ஆகையால் இது தொடர்பான அனைத்து மனுக்களும் முடித்து வைக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.