சாக்கடை நீரைக் குடிக்கிறோம்.. மும்பையில் சிக்கிய தமிழர்கள்..
ஒவ்வொரு வருடமும் கோடை மழை சீசன் தொடங்கவிருக்கும் சமயத்தில் தமிழ்நாட்டிலிருந்து காண்ட்ராக்ட் லேபர்கள் மும்பை செல்வது வழக்கம். இவர்கள் மழை நாட்களில் சாலைகளில் தேங்கும் மழை நீரைச் சுத்தப்படுத்துவது, ட்ரைனேஜ் அடைப்புகளைச் சரி செய்வது போன்ற வேலைகளை செய்வதற்காக வென்று நியமிக்கப்படுபவர்கள். இவர்கள் பெரும்பாலும் கடலூர், விழுப்புரம் மற்றும் திருநெல்வேலியிலிருந்து செல்பவர்கள்.
அதே போல இந்த வருடமும் சுமார் 300 பேர் வரை பிப்ரவரி கடைசி மற்றும் மார்ச் முதல் வாரங்களில் மும்பை சென்றுள்ளனர். ஆனால் எதிர்பாராத விதமாக அறிவிக்கப்பட்ட இந்த கொரோனா ஊரடங்கு இவர்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிட்டது.
அழைத்துச்சென்ற கான்ட்ராக்டர்களால் கைவிடப்பட்ட நிலையில் கையில் இருக்கும் பொருட்களைக் கொண்டு மாஹிம் ரயில்வே டிராக் ஓரமாகக் கூடாரம் அமைத்து அதில் தங்கி வருகின்றனர். தன்னார்வலர்கள் தரும் உணவு மட்டுமே இவர்களின் தற்போதைய வாழ்வாதாரம். குடிக்கக் கூட தண்ணீர் இல்லாமல் அருகே கசிந்து தேங்கிக்கிடக்கும் குட்டையில் கிடைக்கும் படு மோசமான அழுக்கு நீரைத் தான் குடித்து வருகின்றனர்.
பெரும்பாலான பெற்றோர் தங்களின் குழந்தைகளைச் சொந்த பந்தங்களின் பராமரிப்பில் ஊரிலேயே விட்டுவிட்டு வந்துள்ளனர். அவர்களுக்கு அனுப்பப் பணம் ஏதும் கையில் இல்லாத நிலையில், அங்கே குழந்தைகள் இந்த ஊரடங்கின் போது என்ன அவஸ்தையில் இருக்கிறார்களோ என்கிற கவலை ஒரு புறம். சரியான உணவோ, சுத்தமான குடிநீரோ இல்லாமல் ஊருக்குச் செல்லவும் வழி ஏதுமில்லாத பரிதாப நிலை ஒருபுறமென்று பெரும் துயரத்தில் சிக்கித் தவித்து வருகின்றனர் இவர்கள். இதில் ஏழு கர்ப்பிணிப் பெண்களும் குழந்தைகளும் அடக்கம்.
இவ்வளவு துயரங்களையும் அனுபவித்து வரும் இவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கூலி எவ்வளவு தெரியுமா? ஆண்களுக்கு ரூ. 250/-. பெண்களுக்கு ரூ. 200/- மட்டுமே. 50 வயதான பிரவின் குமார், “இதுமாதிரி சீசன் நேரத்தில ஏதோ சம்பாரிக்கலாம்னு வந்து இப்படி இக்கட்டுல மாட்டிக்கிட்டோம். என்ன செய்றதுனே தெர்ல” என்கிறார் பரிதாபமாக.
போர்க்கால அகதிகளின் நிலையை விட மோசமானதாக உள்ளது தமிழ்நாட்டிலிருந்து பிழைப்புக்காகச் சென்ற இவர்களின் நிலை.
– லெட்சுமி பிரியா