மாஸ்கோ

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் ரஷ்யா சீனாவை மிஞ்சியது.

சீனாவின் ஊஹான் நகரில் சென்ற ஆண்டு இறுதியில் COVID-19 கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகம் முழுதும் இத்தொற்றால் அதிக உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டு வருகின்றன.

ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், இத்தாலி, பிரிட்டன் போன்ற நாடுகள் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகின்றன.

இந்நிலையில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கையில்  ஒரேநாளில் 6411 பேர் என ரஷ்யா சீனாவை பின்னுக்குத் தள்ளியுள்ளது. சீனாவில் 82000 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ரஷ்யாவில் 93500 ஐக் கடந்துள்ளது.

இது குறித்து ரஷ்ய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 93650 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் பலியானோர் எண்ணிக்கை 850 ஐக் கடந்துள்ளது. குறிப்பாக தலைநகர் மாஸ்கோவில் கொரோனாத் தாக்கம் அதிகமாக உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் அமெரிக்கா கொரோனாவால் அதிக உயிர்களை இழந்து வரும் நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் செயல்பாடும் பேச்சும் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

இந்நிலையில் ரஷ்யாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை இனி வரும் நாட்களில் அதிபர் விளாடிமிர் புதின் எவ்வாறு நடைமுறை படுத்துவார் என உலகத் தலைவர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.