புதுடெல்லி :
ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முந்தியதினமான மார்ச் 23 அன்று புதுடெல்லியில் நடந்த தப்லிகி ஜமாதில் கலந்துகொண்டவர்கள் பெரும்பாலானோர்க்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கண்டறியப்பட்டது அனைவரும் அறிந்ததே.
இந்தியாவில் மொத்த கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கையில் சுமார் 4000 க்கும் மேற்பட்டோர் டெல்லியின் நிஜாமுதீனில் அமைந்துள்ள ஜமாத் தலைமையகமான மார்க்கஸில் நடைபெற்ற மதக் கூட்டங்களுடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்பட்டது.
ஆனால் தற்போது, புனித ரம்ஜான் மாதம் தொடங்கியவுடன், தொற்று நோய் ஏற்பட காரணம் இவர்கள் தான் என்று தங்களை குற்றம் சாட்டிய அதே மக்களுக்கு இவர்கள் உதவ முன்வந்திருக்கின்றனர்.
ஜமாஅத் தலைவரான மவுலானா சாத், ரம்ஜான் காலத்தில் அனைத்து முஸ்லிம்களும் வீட்டில் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும் கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்த பிளாஸ்மாவை தானம் செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
அதேவேளையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் பிளாஸ்மா சிகிச்சைக்கு பிளாஸ்மா தானம் செய்ய கொரோனா வைரஸ் நோயிலிருந்து குணமடைந்தவர்கள் முன்வரவேண்டும் என்று வேண்டுகோள்வைத்தார்.
இவர்களின் வேண்டுகோளையேற்று, டெல்லி நரேலி பகுதியைச் சேர்ந்த கொரோனா வைரஸ் தாக்கி குணமடைந்த தப்லிகி ஜமாத்தில் பங்கேற்ற 300 இஸ்லாமியர்கள் நேற்றுவரை இந்த பிளாஸ்மா தானம் செய்ய முன்வந்திருக்கும் நிலையில், இன்று மேலும் 51 பேர் பிளாஸ்மா தானம் செய்ய பதிவு செய்திருக்கின்றனர். மாநில அரசின் ஒப்புதலுக்கு பின் இவர்களிடம் இருந்து பிளாஸ்மா தானம் பெறப்படும் என்று தெரிகிறது.
கொரோனா வைரசை பரப்பியவர்கள் இவர்கள் தான் என்று நேற்றுவரை நாடு முழுக்க குற்றம்சாட்டப்பட்டு, இவர்கள் கொண்டுவரும் அத்தியாவசிய பொருட்களையும் புறக்கணித்து வந்த நிலையில், இன்று தங்களை குற்றம் சாட்டியவர்களின் உயிரை காப்பாற்ற பேருதவியாக இருக்கக்கூடிய பிளாஸ்மாவை இவர்கள் தானம் செய்ய முன் வந்திருப்பது அனைவரின் வயிற்றிலும் பால் வார்ப்பதாக உள்ளது.
இதுபோன்ற பிளாஸ்மா தெரபி சிகிச்சை கேரளா, குஜராத் மற்றும் டெல்லியில் சிறந்த பலனளித்துவரும் வேலையில், தமிழகத்திலும் இந்த சிகிச்சை இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கப்படும் என்று தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளது தமிழகத்திலும் பலரின் நம்பிக்கையில் பால் வார்ப்பதாக இருப்பது குறிப்பிடத்தக்கது.