திருவனந்தபுரம்: நிமோனியா, சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட 84 வயதான கொரோனா நோயாளி கேரளாவில் குணமடைந்துள்ளார்.
கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 84 வயது நோயாளி தான் அவர். மூரியத் அபுபக்கர் என்ற நோயாளி கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த கூத்துப்பரம்பாவைச் சேர்ந்தவர், சிறுநீரக நோய்களாலும் அவதிப்பட்டு வந்தார்.
அபுபக்கரின் மகன் மார்ச் 13 அன்று துபாயிலிருந்து திரும்பி வந்து தனிமைப்படுத்தலில் இருந்தார். அப்போது அபுபக்கர் கீழே விழுந்து எலும்பை முறித்துக் கொண்டார். அவரது குடும்பத்தினர் அவரை தலசேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
2 நாட்களுக்குப் பிறகு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இருப்பினும், அதன் பிறகு, அவருக்கு காய்ச்சல் ஏற்பட, கண்ணூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கோழிக்கோட்டில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
ஏப்ரல் 11ம் தேதி, அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட, பின்னர் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டார். அவருக்கு நிமோனியா, சுவாசப் பிரச்சினைகள், இதயத் துடிப்புகளில் மாறுபாடு மற்றும் சிறுநீரக நோய் இருந்ததால் நிலை மிகவும் மோசமாக இருந்தது. ஒரு நிபுணர் குழுவின் இடைவிடாத சிகிச்சையால் குணமடைந்தார் என்று அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மருத்துவக்குழுவை முதலமைச்சர் பினராயி விஜயன், சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலாஜா ஆகியோர் பாராட்டினர். 60 வயதிற்கு மேற்பட்ட நோயாளிகளை அதிக ஆபத்துள்ள வகையாக நாங்கள் கருதுகிறோம். இது கேரளாவின் வெற்றிக் கதை, ஏனெனில் நோயாளி வேறு பல நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார் என்று முதலமைச்சர் கூறினார்.