சென்னை :
தமிழகத்தில் அடுத்த சில நாட்களில் வெப்பசலனம் காரணமாக மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், இன்றுஅதிகாலை முதலே சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில், இடி மின்னல், சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வெப்பசலனம் காரணமாக, இன்று முதல் நான்கு நாட்களுக்கு, தமிழகம் புதுச்சேரி கடலோர மாவட்டங்கள் உள்ளிட்ட பெரும்பாலான கடலோர மாவட்டங்களில், மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்திருந்தது
இந்த நிலையில், இன்று அதிகாலை முதல் சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் இடி, மின்னல், சூறை காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சூறைக்காற்றால் பல இடங்களில் மரம் உடைந்து விழுந்தது. இதையடுத்து, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை உள்பட புழல், செங்குன்றம், பூந்தமல்லி கடம்பத்தூர், திருவள்ளூர் உள்ளிட்ட ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்தது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம் 12 நங்கநல்லூர் பகுதியில் சூறைக்காற்றுக்கு பல மரங்கள் சரிந்து விழுந்தன. அந்த பகுதிக்கு விரைந்து வந்த மாநகராட்சி ஊழியர்கள் ஜேசிபி இயந்திரம் உதவியுடன் மரங்களை அறுத்து அப்புறப்படுத்தினர்.
கொரோனா ஊரடங்கால் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ள மக்கள் கடுமையாக புளுக்கத்தில் அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று காலை பெய்த மழை மக்களிடையே மகிழ்சியை ஏற்படுத்தி உள்ளது.