புதுடெல்லி:

மிழகத்தில், ஊரடங்கு உத்தரவு காரனமாக மதிப்பு கூட்டு வரி வசூல் குறைந்துள்ளதாக இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவும், வைரஸ் பரவலை தடுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உலகின் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல் படுத்தபட்டுள்ளது. இதே போன்று இந்தியாவிலும், கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. இந்த 21 நாட்கள் முடிவடைந்த பின்னரும் கொரோனா பாதிப்பு குறையாமல் இருந்ததால், இந்த ஊரடங்கு மே 3-ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு உத்தரவு  அமலில் உள்ள நிலையில், மாநிலங்களின் மதிப்புக் கூட்டு வரி வசூல் குறித்து, பி.ஆர்.எஸ். என்ற தனியார் அமைப்பு ஆய்வு நடத்தியது.  இந்த ஆய்வின் முடிவில், மற்ற மாநிலங்களைவிடத் தமிழகத்தில் 61 சதவிகிதம் வரி வசூல் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மதிப்புக் கூட்டு வரி வசூல் தமிழகத்தில் குறைந்ததற்கு, பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிபொருள் விற்பனை சரிவு மற்றும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடல் போன்றவையே காரணம் என்றும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மொத்தமாக, பெட்ரோல் மற்றும் மதுபானங்கள் விற்பனை மூலம் கிடைக்கக் கூடிய விற்பனை வரி மற்றும் மதிப்புக் கூட்டு வரி 3 ஆயிரத்து 736 கோடி ரூபாய் குறைந்துள்ளதாக அந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், தமிழகத்துக்கு அடுத்தபடியாக மகாராஷ்டிராவில் 2 ஆயிரத்து 667 கோடி ரூபாயும், உத்தரப் பிரதேசத்தில் ஆயிரத்து 886 கோடி ரூபாயும் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. தெலங்கானாவில் 760 கோடி ரூபாயும், கேரளாவில் ஆயிரத்து 551 கோடி ரூபாயும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி மதிப்புக் கூட்டு வரி வசூல் குறைவால், மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் ஒரு சதவிகிதம் குறைய வாய்ப்புள்ளதாகத் அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.