திருவனந்தபுரம்: கேரளாவில் 20 முறை நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் என முடிவு வந்த பெண் 48 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் வைரசில் இருந்து முழுமையாக குணமடைந்து ஆச்சரியம் அளித்துள்ளார்.

நாடு முழுவதும் 23 ஆயிரத்து 452 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. வைரசுக்கு இதுவரை 724 பேர் பலியாகியுள்ளனர்.  இந் நிலையில், 48 நாட்களில் 20 முறை மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் என ஒரு பெண் நோயாளிக்கு முடிவுகள் வந்தன. தற்போது அவர் முழுமையாக குணம் அடைந்துள்ளார்.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் ராணி என்ற கிராமத்தை சேர்ந்த ஷெர்லி அப்ரகாம் என்ற பெண் கொரோனா அறிகுறியுடன் மார்ச் 8ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஷெர்லியின் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்த போது கொரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் கொரோனா சிறப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். கொரோனா நோயாளிகளுக்கு 20 நாட்கள் வரை சிகிச்சை தரப்படும்.

ஆனால் இவருக்கு தரப்பட்ட சிகிச்சையே வித்தியாசமானது. சிகிச்சையின் போது மொத்தம் 20 முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அனைத்திலும் கொரோனா இருப்பதாகவே வந்தது. இதையடுத்து சிகிச்சை முறையில் மருத்துவர்கள் மாற்றம் கொண்டு வந்தனர்.

21, 22வது சோதனையில் அவருக்கு நெகட்டிவ் என்று வர, மகிழ்ச்சியடைந்த மருத்துவர்கள் ஷெர்லியை கொரோனா வார்டில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து 14 நாட்கள் தனிமைப்படுத்த முடிவு செய்துள்ளனர். 20 முறை கொரோனா பாசிட்டிவ் என வந்த பெண் 48 நாட்கள் கேரள மருத்துவ ஊழியர்கள் மேற்கொண்ட தொடர் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.