டில்லி
ஒரு மாத ஊரடங்குக்குப் பிறகு டில்லியில் ஹார்ட்வேர் மற்றும் பெயிண்ட் விற்கும் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 வரை கொரோனா தாக்கம் காரணமாக நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதையொட்டி அத்தியாவசிய பொருட்களான மளிகை, பால், காய்கறி, மருந்துகள் போன்றவை விற்கும் கடைகளைத் தவிர மற்றவை அனைத்தும் மூடப்பட்டன. தற்போது ஊரடங்கு மே மாதம் 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊரடங்கை நீட்டிக்கும் போது ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு மேல் அந்தந்த மாநில அரசு அப்போதைய நிலைமையைப் பொறுத்து ஊரடங்கு விதிகளைத் தளர்த்திக் கொள்ள அனுமதி அளித்தது. ஆயினும் ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கு விதிகள் தளர்த்தப்படவில்லை.
மாநிலங்களின் கடை மற்றும் வர்த்தக நிறுவன விதிகளின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ள மக்கள் வசிக்கும் இடங்களில் உள்ள கடைகள், தனி வர்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு ஊரடங்கு விதிகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த அடிப்படையில் டில்லியில் உள்ள லட்சுமி நகரில் பெயிண்டு, ஹார்ட்வேர் பொருட்கள் விற்கும் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.