மதுரை:
கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு காரணமாக, பாரம்பரியம் மிக்க மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது பக்கதர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஆண்டு மதுரை சித்திரைத் திருவிழா காலத்தில், பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு அறிவிக்கப்பட்டதால், சித்திரைத்திருவிழா பிரமாண்டமாக நடைபெறுவதில் குழப்பம் ஏற்பட்டது. பின்னர் வாக்குப்பதிவு நேரம் நீட்டித்து தேர்தலும் நடைபெற்றது, திருவிழாவும் நடைபெற்றது.
இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக திருவிழாவே ரத்து செய்யப்பட்டு உள்ளது. பாரம்பரியமாக நடைபெற்று வரும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை உலகப்புகழ் பெற்றது. இந்த திருவிழாவில் தென்மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் கலந்துகொள்வர். இதனால் மதுரை விழாக்கோலம் பூண்டு, எங்கு நோக்கினும் மனித்தலைகளாக காணப்படும்.
ஆனால், தற்போது, கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சமூக விலகல் முக்கியம் என்பதால், இந்த ஆண்டு சித்திரை திருவிழாவை ரத்து செய்து மதுரை மாவட்டஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.
வரும் 25ந்தேதி சித்திரைத் திருவிழா கொடியேற்றம் நடைபெற இருந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் விழாவை ரத்து செய்து அறநிலைய துறை உத்தரவிட்டுள்ளது.
இதன் காரணமாக, மே 2ந்தேதி நடக்கவிருந்த மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், மே.3ந்தேதி நடைபெற இருந்த திக்விஜயம் மே.ந்தேதி நடைபெற இருந்த மீனாட்சி, சொக்கநாதர் திருக்கல்யாணம், மே. ந்தேதி திருத்தேரோட்டம் உள்ளிட்ட அனைத்து விழாக்களும் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக, மே 7ந்தேதி, கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருருளலும் ரத்து செய்யப்பட்டது.
இதற்கிடையில், கோவில் நிர்வாகம் தரப்பில், மீனாட்சி, சொக்கநாதர் திருக்கல்யாணத்தை முன்னிட்டு திருமாங்கல்யம் அணிவிக்கும் திருக்கல்யாண விழாவை சாஸ்திர சம்பிரதாயபடி எளிமையாக நடத்த அனுமதி கோரப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சித்திரைத் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ள நிகழ்வு தென்மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.