சென்னை:
நாடு முழுவதும் ஊரடங்கு மே 3ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மத்தியஅரசு வெளியிட்டுள்ள வழிக்காட்டுதலின்படி, தமிழகத்தில் வரும் 20ந்தேதிக்கு மேல் கட்டுமானப் பணிகள் தொடங்குவது குறித்து, துணைமுதல்வரும், குடிசை மாற்று வாரியம், வீட்டு வசதி வாரியம் துறை அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வத்தை,இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கங்களைச் சேர்ந்த (கிரெடாய் -Real Estate Developers’ Associations of India CREDAI) நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் கட்டுமானத் தொழில் உள்பட அனைத்து வகையான தொழில் களும் முடங்கி உள்ளன. இதனால் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், ஊரடங்கை மே மாதம் 3ந்தேதி வரை நீடித்த பிரதமர், மோடி, வரும் 20ந்தேதிக்கு பிறகு கட்டுமான தொழில்கள் உள்பட சில தொழில் நிறுவனங்கள் மற்றும் சில வகையான தொழில்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து மாநிலங்கள் முடிவு செய்யலாம் என்று வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில், 20ஆம் தேதிக்கு மேல் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது குறித்து துணை முதலமைச்சரோடு கிரெடாய் நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.
தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் கிரெடாய் அமைப்பின் தமிழகத் தலைவர் ஸ்ரீதரன், பாதம் தூஹர், ஹபீப் உள்ளிட்ட பல்வேறு கட்டுமான நிறுவனங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மேலும் தமிழக வீட்டு வசதி வாரியச் செயலாளர் ராஜேஷ் லக்கானி, சிஎம்டிஏ செயலர் கார்த்திகேயன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரம் அடைந்துள்ள சூழலில், கட்டுமானப் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.